×
 
☰

குரோம்பேட்டை பெரிய ஏரியில் சோகம்: 2 சிறுமிகள் உள்பட 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

குரோம்பேட்டை பெரிய ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பெரிய ஏரியில் (திருநீர்மலை ஏரி) நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட ஒரே பகுதியைச் சேர்ந்த நான்கு பள்ளிச் சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டை, லட்சுமிபுரம் கிருஷ்ணா தெரு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் யுவனேஷ் (10), தேவதர்ஷன் (12) மற்றும் சிறுமிகளான பூஜா (13), குஷி (13) ஆகிய நான்கு பேரும் நண்பர்களாகவும் பக்கத்து வீட்டுக்காரர்களாகவும் பழகி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று மதியம் முதல் திடீரெனக் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை குரோம்பேட்டை பெரிய ஏரிப் பகுதியில் சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகக் குரோம்பேட்டை மற்றும் சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர், ஏரியின் சேற்றுப் பகுதிக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்த நான்கு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த யுவனேஷ் (10), பூஜா (13), குஷி (13) மற்றும் தேவதர்ஷன் (12) என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரின் உடல்களும் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து! காட்டாங்குளத்தூரில் 26 வயது இளைஞர் பரிதாப பலி!

இதற்கிடையே, சிறுவர்கள் ஏரிக்குச் செல்வதற்கு முன்பாக லட்சுமிபுரம் தெருவில் நால்வரும் ஒன்றாக நடந்து செல்லும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தப் பதிவுகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது ஆழமான சேற்றில் சிக்கி மூழ்கினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியைச் சேர்ந்த நான்கு பள்ளிச் சிறுவர்கள் ஏரியில் மூழ்கி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் லட்சுமிபுரம் மற்றும் குரோம்பேட்டை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கண்ணீரையும் வரவழைத்துள்ளது.

இதையும் படிங்க: துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள்! வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share