×
 

Breaking! கரூர் பெருந்துயரம்! மேலும் ஒரு பெண் மரணம்! பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற பெண் இன்று அதிகாலையில் இறந்தார்.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மூன்றாம் கட்ட பிரசாரத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் செப்டம்பர் 27 அன்று மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில், விஜயைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில், 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மேலும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், 13 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இவர்களில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேர், திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேர் அடங்குவர். 

இதையும் படிங்க: #BREAKING! தவெக தலைவர் விஜய் மீது வழக்கு? ஸ்டாலின் போட்ட உத்தரவு! களமிறங்கிய செந்தில்பாலாஜி!

நேற்று மதியம், சணப்பிரட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த நவீன் (வயது 34) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 29) அதிகாலை, வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த நல்லுசாமியின் மனைவி சுகுணா (வயது 65) மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இதனால், பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. தற்போது, கரூர் அரசு மருத்துவமனையில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், மேலும் 90-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, செப்டம்பர் 27 அன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம், பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. பெருமளவு மக்கள் திரளும் நிகழ்ச்சிகளில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, அரசு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம், தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார உத்திகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING! டாக்டர்ஸ் உடனே கரூர் வாங்க! பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல பீஸ் வாங்காதீங்க! பறக்கும் உத்தரவு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share