×
 

தவெக கொடி கலர் படகுகளுக்கு மானியம் இல்லையா..? மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம்..!

தவெக பெயர், கொடி வர்ணம் பூசிய படகுகளுக்கு மானியம் மறுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, சூசை, சூடி, பெலிக்கான், திபூர்சியான், தீபன், தீபகு ரூஸ், டெலஸ், ரூபன் மற்றும் அஜித் ஆகிய 10 மீனவர்கள் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் ஆவர். இதனால் இவர்கள் தங்கள் படகுகளுக்கு தவெக கொடியில் வண்ணம் பூசி இருந்தனர். இதனால் இந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு இந்த மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய மானியமான 250 லிட்டர் மண்ணெண்ணெய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீனவர்கள் துறை அலுவலகத்தில் கேட்டபோது, குறிப்பிட்ட கட்சி கொடியின் வண்ணத்தில் படகுகள் உள்ளன. பெயிண்டை மாற்றி அடியுங்கள், இல்லை என்றால் மானியம் கிடையாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு தவெகவினர் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யும் மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டி, எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தார். 

மேலும் படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா? என்றும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காசு இல்ல.. மக்களோட பணம்.. சீறிய விஜய்..!

மேலும் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், பல வண்ணங்களில் படகுகள் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர்களை மட்டும் நீக்க சொல்வது பாரபட்சமானது என்றும் படகுகளில் உள்ள பெயர்களை வேண்டுமானால் நீக்கலாம். ஆனால் மீனவர்களின் மனங்களில் உள்ள கழகத்தின் பெயரை யாராலும் நீக்க முடியாது. அரசு இதுபோன்ற நிபந்தனைகளை விதித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கக்கூடாது.  மானிய மண்ணெண்ணெய் வழங்குவது அரசின் கடமை. அதை அரசியல் உள்நோக்கத்துடன் மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற்று மீனவர்களுக்கு உரிய மண்ணெண்ணையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடற்கரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, அரசு விதிமுறைகளின்படி நாட்டுப்படகுகளில் நீலநிற வர்ணம் தான் பூசப்படவேண்டும். மேலும் வேறு எந்த கட்சியின் பெயர்களும் குறிப்பிட்டு இருக்கக்கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் மேற்கண்ட படகுகளில் தவெக கொடி வர்ணமும், சில படகுகளில் அக்கட்சியினர் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தது. இது விதிமீறலாகும்.

ஆனால் தற்போது அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கான மானியங்கள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் வெறும் வாய்மொழி எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி படகுகளின் வர்ணத்தை மாற்றாமல் இருக்கும் பட்சத்தில் அரசின் மானிய சலுகைகளைப் பெற முடியாது என்றும் தெரிவித்தனர். 

 

இதையும் படிங்க: அதிமுக கிடையாது! பாஜக தான் மெயின் டார்கெட்! இது ஸ்டாலின் பார்முலா! சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share