வேலையின்றி இளைஞர்கள் அவதி..! மின்கணக்கீடு தனியாருக்கா.? தவெக அரசின் முடிவுக்கு வேல்முருகன் எதிர்ப்பு..!
மின் கணக்கீடு பணியில் தனியார் ஈடுபடுவதை வேல்முருகன் கண்டித்துள்ளார்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) மின் கணக்கீட்டாளர் பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தனியார் நிறுவனங்களிடம் அப்பணியை ஒப்படைக்கும் முடிவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தகுதிவாய்ந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தேடி அலைவது தமிழ்நாடு அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், TNPDCL-ல் மின் கணக்கீட்டாளர் பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 7,565 பணியிடங்களில் வெறும் 3,063 பேர் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், மீதமுள்ள 4,502 பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, வரும் அக்டோபர் மாதம் முதல் ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மின் மீட்டர் கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.மின் கணக்கீட்டுப் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்றால், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை முறைப்படி ஏன் நிரப்பக் கூடாது என்று கேள்வி எழுப்பிய வேல்முருகன், பணி இருக்கிறது, காலிப் பணியிடங்கள் இருக்கின்றன, அப்பணிக்கான தகுதியுடைய லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் என்று வலியுறுத்தினார்.
அவ்வாறிருக்க, படித்த இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பை வழங்காமல், அப்பணியைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்.தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட உள்ள மின் கணக்கீட்டாளர்களுக்குப் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைத் தேர்வு செய்து, அரசுப் பணியிடங்களில் நிரந்தரமாக நியமிப்பதற்கு என்ன தடை உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, தமிழக அரசின் மின்துறை வெள்ளை அறிக்கையிலேயே TNPDCL நிறுவனத்தில் 53,575 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், களப் பணியாளர் பணிகளுக்கு 12,500 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!
ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மறுபுறம் பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடம் பணியை ஒப்படைப்பது எவ்வகையில் நியாயம் என்று கேட்ட அவர், இது வெறும் மின் மீட்டர் கணக்கீடு தொடர்பான நிர்வாக முடிவு மட்டுமல்ல என்றும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்வதா அல்லது அரசு செய்ய வேண்டிய பணிகளைத் தொடர்ந்து தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பதா என்ற அடிப்படைக் கொள்கை சார்ந்த கேள்வி என்றும் தெரிவித்தார்.மேலும், தவறான மீட்டர் வாசிப்பு மற்றும் கூடுதல் மின்கட்டணம் போன்ற புகார்கள் தொடர்ச்சியாக எழும் சூழலில், ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு துல்லியமான கணக்கீட்டையும் நம்பகமான சேவையையும் எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தனியார் ஒப்பந்த முறையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும், தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட்டு, மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களுக்கும் முறையான நிரந்தர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வாதாரத்தை ஒப்பந்த நிறுவனங்களின் கைகளில் அடகு வைக்காமல், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பி, தகுதியுடைய இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!