விக்கிரவாண்டி மாநாட்டின் 2-ஆம் ஆண்டு நிறைவு: தவெக ஐடி விங் பெருமித அறிக்கை!
விக்கிரவாண்டியில் கொடுத்த வாக்குறுதிகளை இன்று முதலமைச்சராக விஜய் நிறைவேற்றி வருகிறார் என தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (TVK IT Wing) நெகிழ்ச்சியான நினைவுக் குறிப்பைப் பகிர்ந்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024 அக்டோபர் 27-ஆம் தேதி இதே நாளில், தமிழக அரசியலின் வழித்தடத்தையே மாற்றியமைக்கும் வண்ணம் 'வெற்றிக் கொள்கைத் திருவிழா' என்ற பெயரில் தவெக-வின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது என்பதை நினைவு கூர்ந்துள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாகத் திரண்ட அந்த மாநாட்டில், 100 அடி உயர கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை முன்னிறுத்தித் தளபதி விஜய் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். ஊழல் மற்றும் மக்கள் விரோத சக்திகளை விரட்டி அடித்துத் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அந்த மாநாடே வலுவான அடித்தளமாக அமைந்தது என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏவுக்கு உச்சக்கட்ட எதிர்ப்பு... பட்டப்பகலில் நடு ரோட்டில் இறங்கி சொந்த கட்சியினரே செய்த சம்பவம்...!
மேலும், அன்று விக்கிரவாண்டி வெற்றிச் சாலையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களுக்குத் தலைவர் விஜய் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினாரோ, அவற்றை இன்று மாண்புமிகு முதலமைச்சராகத் திறம்பட நிறைவேற்றி வருகிறார். தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதுடன், கொள்கை எதிரிகள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் சமரசமின்றி உறுதியாக நின்று தூய சக்தியாகத் திகழ்கிறார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயர்ந்த சமத்துவக் கோட்பாட்டுடன் மனசாட்சியுள்ள மக்களாட்சியை நடத்தி வரும் முதலமைச்சரின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொடரும் என்றும் தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மூடி மறைக்கப்படும் அரசாணைகள், நியமனங்கள்!! கேள்விக்குறியாகும் தூய ஆட்சியின் வெளிப்படைத் தன்மை!