×
 

தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள்! அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? மாஜிக்களை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!

சட்டசபையில் தகாத வார்த்தைகளை முன்னாள் அமைச்சர்கள் பயன்படுகின்றனர்; அவர்களுக்கு மாண்பு இருக்கிறதாா? என அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி: சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்புவதுடன், அமைச்சர்கள் பேசும்போது சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அவர்களுக்கு முதலில் சட்டசபையின் மாண்பு குறித்து தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், சட்டசபை ஜனநாயக முறைப்படி நடத்தப்படுவதாக தெரிவித்தார். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், அவையில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளை அவை மரபுப்படி நீக்குவதும் வழக்கமான நடைமுறை என்றார். கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு போதிய இடம் இல்லை என்ற விமர்சனத்தை முன்வைத்த அவர், தற்போதைய ஆட்சியில் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறினார்.

சட்டசபை நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், திமுக உறுப்பினர்கள் அமரும் பக்கம் கேமராவை திருப்பினால் என்ன காட்சிகள் பதிவாகும் என்பது மக்களுக்கே தெரியும் என்று விமர்சித்தார். ஆளுங்கட்சியில் முதல்முறையாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் இருப்பதாகவும், அவர்கள் மக்கள் பிரச்னைகளை அவையில் மாண்புடன் முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டசபை நேரலையால் அழு அழுவென அழுகிறார்கள்!! அமைச்சர் கீர்த்தனா விமர்சனம்!

அதேநேரத்தில் எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு விவாதத்தின்போதும் எழுந்து கூச்சலிடுவதாகவும், கத்துவதாகவும், சில நேரங்களில் இருக்கையில் இருந்து கீழே இறங்கி வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். சில முன்னாள் அமைச்சர்கள் பின்வரிசையில் அமர்ந்துகொண்டு, தற்போதைய அமைச்சர்கள் பேசும்போது தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அமைச்சர், தங்கள் தரப்பில் தவறான வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.

மேலும், முதல்வர் விஜய்யை நம்பி தவெகவுக்கு வந்தவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் அவர் பார்த்துக்கொள்வார் என்றும் ரமேஷ் தெரிவித்தார். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு தேவையான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாகவும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை அடையாளம் கண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், முழுமையாக சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து மீண்டும் வழிபாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு, மாற்றுக்கட்சிகளில் இருந்து தவெகவுக்கு வந்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் குறித்து முதல்வர் விஜய் முடிவு செய்வார் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய் பிரதமரா? இன்னும் ரசிகர் மன்ற Mode-ல்தான் இருக்கிறார்கள்! தவெக அமைச்சர்களை கிண்டல் செய்த மாணிக்கம் தாகூர்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share