நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!
தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கை வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு செய்த அமைச்சரின் செயலை அதிமுக விமர்சித்துள்ளது.
தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத், வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட் அறிக்கையின் வரைவு நகலைக் கையில் வைத்துக்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான வினோத், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் வேளாண் துறை பொறுப்பை வகிக்கிறார். வேளாண் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் வரைவு நகலை எடுத்துச் சென்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார்.
பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்த பொதுவெளியிலும் வைக்கக் கூடாது என்பது தெரியாதா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, தவெக அரசின் வேளாண்துறை அமைச்சர் திருப்பதியில் வைத்து பூஜை செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!
பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடம் இருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது, சட்டப்படி குற்றம் இல்லையா? என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச் செய்துள்ள அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!