விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!
தேர்தல் பணிமனைக்கு சர்ப்ரைஸ் விசிட். பெண்மணியின் வேண்டுகோளுக்காக 'விசில் கோலம்' போட்ட தவெக தலைவர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பெரம்பூர் தொகுதி வேட்பாளருமான விஜய், இன்று மாலை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது தேர்தல் பணிமனைக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீர் வருகை (Surprise Visit) தந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்த அவர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
பணிமனைக்கு வந்திருந்த ஒரு பெண்மணி, எங்கள் சின்னமான விசில் சின்னத்தை நீங்களே கோலமாக இட வேண்டும் என விஜய்யிடம் அன்புக் கோரிக்கை விடுத்தார். அந்தப் பெண்மணியின் விருப்பத்தை ஏற்று, விஜய் புன்னகையுடன் தரையில் அமர்ந்து 'விசில்' சின்னத்தை கோலமாக வரைந்து அசத்தினார். நமது வெற்றியின் அடையாளமாக, அனைவரும் தங்களது இல்லங்களின் முன் விசில் சின்னத்தை கோலமிடுங்கள் என அவர் அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
தன்னைச் சந்திக்க வருவது கடினம் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில் விஜய் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தமிழ்நாட்டிற்கு நான் என்னவாக இருந்தாலும், பெரம்பூர் தொகுதிக்கு நான் ஒரு MLA தான். என் வீட்டுக்கு நான் பிள்ளை தான். அதனால்தான் இந்தத் தொகுதி எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என்னைச் சந்திப்பது கஷ்டம் என்று நினைக்க வேண்டாம்; நான் மாதத்திற்கு ஒருமுறை இங்கு வருவேன், நீங்கள் என்னைத் தாராளமாகச் சந்திக்கலாம். நீங்கள் கேட்காமலேயே உங்கள் தேவைகளை நான் செய்து கொடுப்பேன் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: விசில் சத்தம் காதை கிழிக்கப்போகுது..!! 21ம் தேதி நந்தனத்தில்.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் விஜய்..!!
பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே தனது முதல் பரப்புரையைத் தொடங்கிய விஜய், தற்போது சத்தமே இல்லாமல் தனது தேர்தல் பணிமனையில் பணிகளை ஆய்வு செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் அவர் போட்டியிடும் நிலையில், பெரம்பூர் மக்களுடன் அவர் காட்டும் இந்தத் தனிப்பட்ட நெருக்கம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் "வீட்டுப் பிள்ளை" என்ற முழக்கம் பெரம்பூர் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!