×
 

உதயநிதி என்னை கொள்கை ஆசான் என்றதில் உள்நோக்கம் இல்லை! விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

உதயநிதி ஸ்டாலின் தன்னை கொள்கை ஆசான் என்று பேரவையில் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என முகநூல் நேரலையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தயக்கமின்றி கொள்கை ஆசான் என்று குறிப்பிட்டதில் எவ்வித உள்நோக்கமோ எதிர்பார்ப்போ இல்லை என்றும், அரசியல் களச் சூழல்களைத் தாண்டி உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில் மனம் திறந்து அவர் பேசியதற்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான முகநூல் நேரலை வாயிலாகத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய தொல்.திருமாவளவன், சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாகப் பேசினார். எந்தவிதத் தயக்கமும் இன்றி, முழு மனதுடன் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் திருமாவளவன் என்னுடைய கொள்கை ஆசான் என்று வெளிப்படையாகப் பேசினார். இது நமது விடுதலைச் சிறுத்தைகள் பேரியக்கத்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் பெருமிதத்தையும் தந்துள்ளது. 

இதற்காக அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் அவ்வாறு பேசியது ஏதோ அரசியல் உள்நோக்கம் கொண்டதோ அல்லது எதிர்பார்ப்புகளை முன்வைத்தோ பேசப்பட்டது அல்ல. அன்றைக்குக் கூட்டணியில் இருந்தோம் என்பதற்காகப் பேசியது என்றில்லாமல், இன்றைக்குக் கூட்டணியில் நீடிக்க இயலாத சூழல் நிலவும் வேளையிலும் கூட, அதே கருத்தை மனம் உவந்து சட்டப்பேரவை அவைக் குறிப்பில் இடம்பெறும் வகையில் ஆணித்தரமாகப் பேசியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், உணர்ச்சிவசப்பட்டு அவர் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை; உள்ளார்ந்த கொள்கை உணர்வின் அடிப்படையில் தான் வெளிப்படுத்தியுள்ளார். திமுகவின் முன்னணித் தலைவர்களும் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் இந்த உரையை முழுமனதாக வரவேற்று மேசைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் திருமாவளவன் என்ன அவ்வளவு பெரிய ஆளுமையா என்றெல்லாம் கேட்டுத் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். 

புதிய தமிழகம் கட்சித் தலைவர் அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களும் திருமாவளவனும் பெரியாரும் ஒன்றா என்ற தொனியில் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். இதற்கு நமது கட்சியினர் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் இறங்க வேண்டாம்; அவர்களைப் போலவே நாமும் தரம் தாழ்ந்த எதிர் விமர்சனங்களை வைக்காமல் முதிர்ச்சியோடு கடந்து செல்ல வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வரவிருக்கும் வரலாற்று நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்துக் குறிப்பிட்ட தொல்.திருமாவளவன், வரும் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை மற்றும் நினைவு தின நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேரில் பங்கேற்று மலரஞ்சலி செலுத்துவார்கள் என்றும், கட்சியின் முக்கியத் தலைவர்கள் இதில் முன்னின்று மரியாதை செலுத்துவார்கள் என்றும் முகநூல் நேரலையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எங்கள ஓடாதீங்கன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே ஓடுறீங்களே!! CM விஜய்யை கலாய்த்த உதயநிதி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share