"ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!
தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, அங்கு செயல்பட்டு வந்த கஞ்சா கும்பலை எதிர்த்து கேள்வி எழுப்பியதால், அந்தக் கும்பல் அவரை அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து தண்டையார்பேட்டை பகுதி மக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தண்டையார்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் நீண்ட நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் அசௌகரியம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக முன்னாள் MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை, கஞ்சா பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு மற்றும் காவல் துறையின் பணியினை ஒரு இளைஞர் செய்தததால் அதற்கு அவர் கொடுத்த விலை அவரது உயிர் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: 717 மதுக்கடைகள் மூடல் ஒரு நல்ல தொடக்கம்..!! CM விஜய்க்கு நன்றி.. வானதி சீனிவாசன் வரவேற்பு..!!
நாள்தோறும் இப்படி சமூகத்தில் நடைபெறும் அவலங்களை தட்டிக் கேட்கும் பொதுமக்கள் ரவுடிகளின் அட்டகாசத்தால் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என்று கண்டித்துள்ளார். நீங்களும் கடந்த ஆட்சியைப்போலவே இதற்கும் ஏதாவது பதில் சொல்லுவதை விட்டுவிட்டு பொதுமக்களின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை செயலாக்கும் வழிகளை உருவாக்குங்கள் என்றும் கஞ்சா, போதைப் பொருட்களால் தமிழகம் சீரழிந்தது போதும் எனவும் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆய்வுகள் போதும்... ஆக வேண்டியத பாருங்க..! விளாசிய H. ராஜா..!!