சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகல... WAIT பண்ணுங்க.. அமைச்சர் வன்னி அரசு கருத்து..!
சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ற விமர்சனங்களுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே எதிர்க்கட்சிகளிடமிருந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் பின்னணியில், சமூக நீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வன்னிஅரசு இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், இந்த விமர்சனங்கள் திட்டமிட்ட அதீதமான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார். அமைச்சர் வன்னிஅரசு கூறுகையில் “சட்டம்-ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. புதிய அரசு பதவியேற்று 10 நாட்கள் கூட ஆகவில்லை. ஆகவே இது திட்டமிட்டு வைக்கப்படும் அதீதமான குற்றச்சாட்டு” என்று தெளிவாகக் கூறினார்.
புதிய அரசு இன்னும் தனது நிர்வாக அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் வாய்ப்பு கூட இல்லாத நிலையில், இத்தகைய விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். காவல்துறை நிர்வாகம் குறித்து பேசிய அமைச்சர், “ADGP-ஐ இப்போதுதான் நியமித்துள்ளார்கள். DGP-ஐ இனிதான் நியமிக்க வேண்டும். அனைத்து மாற்றங்களையும் செய்தபின் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை” என்றார்.
இதையும் படிங்க: விசிகவினர் மீது கல்வீச்சு..! மீண்டும் மீண்டும் திமுக வீழ்த்தப்படுவது உறுதி..! தவெக கண்டனம்..!
அதாவது, உயர் அதிகாரிகளின் நியமனங்கள் நடைபெற்று வரும் நிலையில், முழு மாற்றங்களுக்குப் பிறகு காவல்துறை சிறப்பாக இயங்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி வருகின்றன. சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றன. இதற்கு பதிலடியாக அமைச்சர் வன்னிஅரசின் இந்த கருத்து அமைந்துள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!