விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 2ஆம் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடத்துவது குறித்து விஜய் ஆலோசனை,சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 25 நாட்கள் விஜய் பரப்புரை செய்வது குறித்தும் ஆலோசனை ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில், மொத்தம் 25 நாட்கள் தீவிரப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான பயணப் பாதை மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்து இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பனையூர் அலுவலகத்தில் முதற்கட்ட நேர்காணல்கள் முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணலை நடத்துவது குறித்து விஜய் ஆலோசனை நடத்தினார். மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு முன்பே, தகுதியான வேட்பாளர்களை இறுதி செய்து முதற்கட்டப் பட்டியலை வெளியிட அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!
அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனித்துப் போட்டி, தனிப் பாதை என்ற கொள்கையில் விஜய் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. திமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பையும் எதிர்த்துப் போரிடும் ஒரே சக்தியாக தவெக இருக்கும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை அவர் நிர்வாகிகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 70,000-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றுவது குறித்து நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் விஜய் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி ஆலோசனைகள், தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் 25 நாள் பிரச்சாரப் பயணம் மார்ச் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!