×
 

அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் அத்துமீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கொண்ட சிறப்புக் குழுக்களின் தீவிர வாகனத் தணிக்கை இடைவிடாது தொடரும் என்றும், விதிமீறும் பேருந்துகளின் உரிமங்கள் மற்றும் அனுமதிச் சான்றுகள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் தமிழகப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 4,900 ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதுடன், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 1,000 ஆம்னி பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகைக் காலங்களில் தலைநகர் சென்னையிலிருந்து மட்டுமே சுமார் 3,000 ஆம்னி பேருந்துகள் மூலம் நாள்தோறும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இத்தகைய சூழலைப் பயன்படுத்தி, சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பண்டிகை நாட்களை ஒட்டி வழக்கமான கட்டணத்தை விடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் போக்குவரத்துத் துறைக்குத் தொடர் புகார்கள் குவிந்தன.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலனைக் காக்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கடந்த மூன்று தினங்களாக மாநிலத்தின் முக்கிய சுங்கச்சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கிடுக்கிப்பிடி வாகனத் தணிக்கை வேட்டை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!

கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 3,512 ஆம்னி பேருந்துகள் நேரில் நிறுத்தப்பட்டு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் உரிய ஆவணங்களின்றி இயங்கியது, கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 639 ஆம்னி பேருந்துகளுக்குத் தணிக்கை அறிக்கை மற்றும் 'இ-சலான்' வழங்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. இந்தச் சிறப்பு வேட்டையின் போது, விதிமீறல்களுக்கான இணக்கக் கட்டணமாக ரூ.14,39,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுத் தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட பேருந்துகளிடமிருந்து தமிழகத்திற்குச் செலுத்த வேண்டிய மோட்டார் வாகன வரியாக ரூ.27,58,243 மற்றும் அபராதமாக ரூ.3,19,000 என மொத்தம் ரூ.30,77,243 வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, கடந்த செப்டம்பர் 12 அன்று அப்பட்டமாகக் கூடுதல் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் மூலம் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை கடைசி நேரத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாக ரத்து செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்து வசதியை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அந்தப் பேருந்தின் அனுமதிச் சீட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்துத் துறை ஆணையரகம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. 

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் 9384808333 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 24 மணி நேரமும் உடனுக்குடன் தெரிவிக்கலாம் எனப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share