×
 

ஊரான் வீட்டு புள்ளைக்கு சுயமரியாதை கல்யாணமாம்... அவங்க வீடுனா சுபமுகூர்த்தம்..! வினோஜ் பி. செல்வம் விமர்சனம்..!!

சுயமரியாதை திருமணத்தை சுட்டிக்காட்டி திராவிட கொள்கையை பாஜகவை சேர்ந்த வினோஜ் பி செல்வம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் வடிவமாக உருவான கட்சி. அதன் மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்பதும், அதற்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தருவதும் ஆகும். இது வெறும் திருமண முறை மாற்றம் மட்டுமல்ல. சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய சாதி, மத ஆதிக்கம், பெண் அடிமைத்தனம், ஆடம்பரம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு புரட்சிகரமான சமூக சீர்திருத்தக் கொள்கையாகும்.

தந்தை பெரியார் 1920களில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது, பாரம்பரிய இந்து திருமண முறையில் உள்ள பிராமண புரோகிதர் ஆதிக்கம், வேத சடங்குகள், தாலி கட்டுதல் போன்றவை பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்படிய வைக்கும் கருவிகளாகவும், சாதி ஒடுக்குமுறையைத் தக்க வைக்கும் கட்டமைப்புகளாகவும் இருப்பதை கண்டித்தார். அவர் சுயமரியாதை திருமணத்தை அறிமுகப்படுத்தினார். இதில் புரோகிதர் இல்லை, வேத மந்திரங்கள் இல்லை, சாதகம் பார்க்கும் வழக்கம் இல்லை, ஆடம்பரமான செலவுகள் இல்லை. மணமக்கள் இருவரும் சமமாக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, மாலை மாற்றுதல், மோதிரம் அணிவித்தல் அல்லது தாலி கட்டுதல் போன்ற எளிய முறையில் தங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்பதாக அறிவிப்பதே முக்கியமானது.

இது காதல், சமத்துவம், தனிமனித சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. திமுக இந்தக் கொள்கையை தனது அடிப்படைத் தத்துவமாக ஏற்றுக்கொண்டது. 1957 தேர்தல் அறிக்கையிலேயே சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்போம் என்று திமுக அறிவித்தது. 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்தவுடன், இதை நிறைவேற்றியது. இன்று வரை சுயமரியாதை திருமணங்களை திராவிட கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள கட்சிகள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. இதனை எதிர்தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி. செல்வம் கடுமையாக இதனை விமர்சித்தார். ஊரான் வீட்டு பிள்ளையை அழைத்து சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை செய்து வைப்பார்கள் என்றும் தன் வீட்டுக்கு பிள்ளைகள் என்றால் மட்டும் சுபமுகூர்த்தம் பார்த்து நல்ல நேரத்தில் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து நடத்தி வைக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். திராவிட கோட்பாட்டை நம்புபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத் திருமண விழா நடைபெற்ற நிலையில் இவ்வாறு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share