ஆக்கிரமிப்பு அகற்றுங்கள்! ராஜகோபுரத்தில் ஏறிப் போராடிய சமூக ஆர்வலர் தவறி விழுந்து பலி..!
விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் இருந்து தவறி விழுந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் உயிரிழந்தார்.
கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் ஏறி போராடிய சமூக ஆர்வலர் ஒருவர் கீழே இறங்கும் போது கால் தவறி 350 உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விராலிமலை அருகே உள்ள குடும்பத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். சமூக ஆர்வலரான இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தை ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று காலை 5 மணி அளவில் அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் ஏறி தேசிய கொடியுடன் போராடினார். கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் கூறி முழக்கங்களை எழுப்பி போராடினார். தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலிமலை காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்டோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: நடிகை கஸ்தூரி பாஜகவில் ஐக்கியம்... நயினார் நாகேந்திரன் சிறப்பான வரவேற்பு!
இதை அடுத்து அவர் கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்து கீழே இறங்கும்போது 350 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “இந்த 4 மாவட்ட கிராம சபை கூட்ட பட்டியல்களை உடனே தாக்கல் செய்யுங்க” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!