அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!
ஆவடி திருமுல்லைவாயில் அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் படம் நீக்கப்பட்டதற்கு வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் முகப்பில் இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் நீக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்று வி.கே.சசிகலா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலையில் உள்ள அம்மா உணவகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் தற்பொழுது நீக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் இத்தகைய சிறப்புமிக்க திட்டத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு வகுத்துக் கொடுத்தவர் ஜெயலலிதா அவர்கள் தான். அப்படிப்பட்ட உன்னத தலைவரின் புகைப்படத்தை அம்மா உணவகங்களிலிருந்து அகற்றுவது முற்றிலும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" - தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!
மேலும், "மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்து நிலைத்திருக்கும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மீண்டும் அதே அம்மா உணவகங்களில் இடம்பெற செய்வதுதான் முறையானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்" என்று வி.கே.சசிகலா தனது அறிக்கையில் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், அம்மா உணவகப் படங்கள் அகற்றப்படும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!