அமித் ஷா மகனுடன் சபரீசனுக்குத் தொடர்பு! அமலாக்கத்துறை மௌனம் காப்பது ஏன் என ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!
அமித் ஷாவின் மகன் உடன் சபரீசன் தொழில்முறை உறவு வைத்துள்ளார் அமலாக்கத்துறை ஏன் விசாரிக்கவில்லை என ஆதவ் அர்ஜுனா கேள்வி.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநிலப் பொறுப்பாளரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோருக்கு இடையே ரகசியத் தொழில்முறை உறவு இருப்பதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சபரீசன் மற்றும் அமித் ஷா குடும்பத்திற்கு இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா: 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2022-இல் சபரீசன் நேரடியாக அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அமித் ஷாவின் மகனுடன் சபரீசன் தொழில்முறை ரீதியான நெருங்கிய உறவை வைத்துள்ளார். இதனால்தான் திமுக மீது மத்திய முகமைகள் மென்மையான போக்கைக் கடைபிடிக்கின்றன" எனக் குற்றம் சாட்டினார்.
திமுக குடும்பத்தினர் நடத்தும் முக்கிய நிறுவனங்களின் நிதிப் பரிமாற்றம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்
சபரீசன் தற்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தையும் பின்னணியில் இருந்து இயக்கி வருகிறார். பென் நிறுவனத்திற்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் எங்கிருந்து வருகிறது? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!
மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்துச் சாடிய அவர் சாதாரண அரசியல்வாதிகளைக் குறிவைக்கும் அமலாக்கத்துறை, இவ்வளவு பெரிய நிதிப் புகார்கள் இருந்தும் சபரீசன் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் மீது ஏன் இதுவரை விசாரணை நடத்தவில்லை? திமுகவும் - பாஜகவும் திரைமறைவில் கைகோர்த்துச் செயல்படுகின்றன என்பதற்கு இதுவே சாட்சி எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்த நிலையில், தற்போது சபரீசன் மற்றும் அமித் ஷாவைத் தொடர்புபடுத்தி அவர் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வப் பதில் அளிக்கப்படவில்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் தவெக வேண்டுமென்றே இத்தகைய பொய்ப் புகார்களைக் கிளப்புவதாக அக்கட்சித் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!