×
 

சிறிய இரத்த பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க அரசாணை எண் 41-ஐ ரத்து செய்க! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை முடக்கும் அரசாணை எண் 41-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒட்டுமொத்தமாக மூடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் அரசாணை எண் 41-ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து, ஏழை எளிய மக்களின் மருத்துவப் பரிசோதனை உரிமையையும், ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் அவர் விடுத்துள்ள விரிவான பத்திரிகைச் செய்தியில், தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சட்ட விதிகள் 2018-ஐ எளிமைப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள், கடந்த பிப்ரவரி 13 அன்று அரசாணை எண் 41 மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதன்படி, ரத்தச் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் உள்ளிட்ட எளிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் அடிப்படை ஆய்வகங்களில், தொழில்நுட்பவியலாளர்கள் மேற்கொள்ளும் பரிசோதனை அறிக்கைகளில் ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று ஓராண்டு அனுபவம் உள்ளவரே கையொப்பமிட வேண்டும் என்ற கடுமையான புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: நீட் ரத்து..! வெளியேறிய பாஜக MLA..! பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையில் ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களே பரிசோதனை அறிக்கைகளில் கையொப்பமிட்டு வழங்கி வரும் நடைமுறை நீடித்து வரும் சூழலில், தற்போது திடீரென இத்தகைய சாத்தியமற்ற புதிய நிபந்தனைகளைத் திணிப்பது சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை அடியோடு ஒழித்துக் கட்டும் உள்நோக்கம் கொண்டதாகும் என மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் உள்ள மொத்த ஆய்வகங்களில் 80 விழுக்காடு அளவில் உள்ள இந்தச் சிறிய பரிசோதனை நிலையங்கள் மூலமாகவே பட்டிதொட்டியெங்கும் உள்ள சாமானிய மற்றும் ஏழை எளிய மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை அவர் பதிவு செய்துள்ளார்.

அரசின் இந்தப் புதிய அரசாணை முழுமையாக அமல்படுத்தப்பட்டால், முதுநிலை பட்டதாரிகளுக்கோ மருத்துவர்களுக்கோ அதிக ஊதியம் வழங்கிப் பணியமர்த்த முடியாத சூழலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் புறநகர் சிறிய ஆய்வகங்கள் நிரந்தரமாக மூடப்படும் சூழல் உருவாகும் என்று எச்சரித்துள்ள அவர், இந்த நடைமுறை நாடு முழுவதும் சங்கிலித் தொடர் அமைப்புகளைக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மட்டுமே வழியமைக்கும் எனவும் சாடியுள்ளார். 

எனவே, கார்ப்பரேட்டுகளுக்குத் துணைபோகும் அரசாணை எண் 41/2026-ஐத் தமிழ்நாடு அரசு எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சிறிய ஆய்வகங்களையும் அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழில்நுட்பவியலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் காக்க வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விவசாய நில வகைமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share