வங்கதேச அரசியலில் சுமார் இரண்டு தசாப்த கால நீண்ட இடைவேளைக்குப் பிறகு, வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) மீண்டும் அரியணையில் ஏறியுள்ளது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் (60), வங்கதேசத்தின் புதிய பிரதமராக இன்று முறைப்படிப் பதவியேற்றுக் கொண்டார். டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசாவில் நடைபெற்ற கண்கவர் விழாவில், அதிபர் முகமது சஹாபுதீன் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். வழக்கமாக அதிபர் மாளிகையில் நடைபெறும் இந்த விழா, இம்முறை பிரம்மாண்டத்தைக் கருதி நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் (பிப்ரவரி 12) நடைபெற்ற 13-வது நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 297 இடங்களில் 209 இடங்களைக் கைப்பற்றி பிஎன்பி அமோக வெற்றி பெற்றது. 17 ஆண்டுகாலப் புலம்பெயர் வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான், தனது தாயார் கலிதா ஜியாவின் மறைவுக்குப் பின் கட்சியைத் திறம்பட வழிநடத்தி இந்த இமாலய வெற்றியைப் பெற்றுள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா மற்றும் கலிதா ஜியா ஆகிய இரு பெண் தலைவர்களே மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் முதல் ஆண் பிரதமராகப் பொறுப்பேற்று வரலாற்றைத் திருத்தி எழுதியுள்ளார். இவருடன் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்றுக் கொண்டது.
இதையும் படிங்க: வங்கதேசம்: நாளை நாடாளுமன்ற தேர்தல்..!! நிலவும் பதற்றம்..!! கள நிலவரம் என்ன..??

இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்துகொண்டு தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி முன்னதாகவே தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், இந்த ராஜதந்திரப் பிரதிநிதித்துவம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. பதவியேற்ற பின்னர் பேசிய பிரதமர் தாரிக் ரஹ்மான், இந்த வெற்றி ஜனநாயகத்திற்கும், அதற்காகத் தியாகம் செய்த மக்களுக்குமானது என்று உணர்ச்சிப்பூர்வமாக முழங்கினார். 18 மாத கால இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், தாரிக் ரஹ்மானின் தலைமையிலான புதிய அரசு வங்கதேசத்தின் பொருளாதார மீட்சி மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வங்கதேசத்திற்கு ஜாக்பாட்: டி20 உலக கோப்பையில் விளையாடாவிட்டாலும் ஐசிசி-யின் அதிரடி சலுகைகள்!