திண்டுக்கல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக தமிழக அரசால் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் விக்னேஷ் இன்று 08.06.26 திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அங்கு இயங்கி வரும் அம்மா உணவகம் ஆகியவற்றில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் தனியார் எஃப் எல் 2 (FL2) பார்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைய புகாருக்குள்ளான மதுபானக் கூடங்கள் அனைத்தும் கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை.

மக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில் இத்தகைய பார்கள் செயல்படுவது தவறான விஷயம் என்பது பொதுமக்களுக்கே தெரியும் போது, அதிகாரிகளுக்கும் இது தெரிந்திருக்கும் என்றும், விதிகளுக்குப் புறம்பாக இதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரியது.
இதையும் படிங்க: டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை என்பது மிகப்பெரிய துறை என்பதால், அதில் உள்ள குறைபாடுகளைத் தீர்க்க தங்களது அரசு ஒவ்வொரு படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, அரசுக்கு வரவேண்டிய வருமானம் முழுமையாக அரசின் கஜானாவிற்குச் செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம்.
அடுத்த கட்டமாக, மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் மற்றும் எம்.ஆர்.பி (MRP) விலையைத் தாண்டி தனிநபர்களுக்குச் செல்லும் தொகை குறித்த பல ஆண்டுகாலப் பிரச்சினைக்கு, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்குள் உரிய தீர்வு எட்டப்படும். இதற்காக ஒட்டுமொத்த துறையும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
மேலும், அரசு மருத்துவமனைகள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவு. ஏற்கனவே 717 மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகளை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

திண்டுக்கல் எஃப் எல் 2 பார்களில் விதிகளை மீறி உறுப்பினர் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவது மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவது போன்ற புகார்கள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அரசு அடுத்தகட்டமாகத் தகுந்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
717 மதுபான கடைகளை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு ஏற்கனவே மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த 717 கடைகளும் ஏதோ ஊருக்கு வெளியில் இருப்பவையோ, வியாபாரம் ஆகாதவையோ அல்லது பார் வசதி இல்லாதவையோ கிடையாது என்றும், கணக்குக் காட்டுவதற்காக இவை மூடப்படவில்லை என்றும்,
நாள்தோறும் 5 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் கடைகள் கூட, மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எந்தவித பாரபட்சமும் இன்றி மூடப்பட்டுள்ளது. இவ்வளவு கடைகளை உடனடியாக மூடியதால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 8,000 கோடியில் இருந்து 11,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்த இழப்பைச் சரிசெய்ய அடுத்தடுத்த துறைகள் மூலம் வருமானத்தைப் பெருக்குவதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தத் துறைகள் மூலமாக வருவாய் ஈட்டப்பட்டவுடன், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அவர்களுக்கு இடையூறாக உள்ள மீதமுள்ள பழைய கடைகளும் இதே முறையில் தொடர்ந்து மூடப்படும். நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்தார். மதுபானக் கடைகளை தனியாருக்கு டெண்டர் விடுவது குறித்து இதுவரை தமிழக அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை
மேலும், ஊடகங்களில் இது தொடர்பாக வெளியாகும் செய்திகளைத் தானும் கவனித்து வருவதாகவும், ஒருவேளை அப்படித் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து மட்டுமே கவனிக்கப்பட்டு bவருகிறதே தவிர, இதுபற்றி இறுதி முடிவு எதுவுமே எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!