தமிழகத்தில் கோடைக்காலம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், வெயிலின் தாக்கம் ஏற்கனவே தீவிரமடைந்துள்ளது. கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்பே உள்பகுதி மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவலின்படி, நேற்று தமிழகத்தில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து பதிவானது.கரூர் மாவட்டம் பரமத்தியில் 106.1 டிகிரி ஃபாரன்ஹீட் (சுமார் 41.2 டிகிரி செல்சியஸ்) என்ற உச்ச வெப்பநிலை பதிவாகி, மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தது.

ஈரோட்டில் 104.3 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, மதுரை நகரில் 103.2 டிகிரி, திருச்சியில் 103.1 டிகிரி, வேலூரில் 102.7 டிகிரி, கோவையில் 101.6 டிகிரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தர்மபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 101.3 டிகிரியும், சேலத்தில் 100.7 டிகிரியும் வெயில் கொளுத்தியது. மொத்தம் 11 நகரங்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது.
இதையும் படிங்க: மக்களே... உஷார்..!! சென்னையை வாட்டி வதைக்கப்போகும் வெயில்..!! வானிலை அப்டேட்..!!
சென்னையில் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது. மீனம்பாக்கத்தில் 97.8 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 93.5 டிகிரியும் பதிவானாலும், கடலோர ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வெப்ப உணர்வு (heat index) மிக அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் வெளியில் நடமாடும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் வெயிலின் கொடுமையை உணர்கின்றனர்.
வீடுகளில் உள்ள மின்விசிறிகள் கூட அனல் காற்றை வீசுவதால் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்கள் குடைகளைப் பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடியபடியும் செல்லும் காட்சிகள் பொதுவானதாகிவிட்டன. பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கடைகளில் இளநீர், நுங்கு, தர்பூசணி, குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், திறந்தவெளியில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், இரவு நேரங்களிலும் வீடுகளில் புழுக்கம் நிலவுகிறது. குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் தூக்கம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தால் உடல் நலக் குறைவு, நீரிழப்பு, வியர்வை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மருத்துவர்கள், பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், இலேசான உணவுகள், தலைக்கு ஈரத்துணி வைத்தல், சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல், கடலோரப் பகுதிகளில் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் நீடிக்கும். பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களையும், குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். வெயில் தாக்கத்தால் பணி இழப்பு, உடல்நலப் பாதிப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்க, அரசும் தனியார் நிறுவனங்களும் பகல் நேர வேலைகளில் தேவையான இடைவெளி அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
இதையும் படிங்க: சும்மா சுள்ளுனு..! கொளுத்த போகுது வெயில்..! உஷார் மக்களே... வானிலை மையம் அலர்ட்..!