தமிழக கோவில்களில் தொடர்ந்து நடக்கும் குற்றங்கள், ஆகம மீறல்கள், பண மோசடிகள் ஆகியவை 'ராஜகுற்றம்' என்ற தோஷத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடரும் தமிழக பா.ஜ., ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநில அமைப்பாளருமான ஷெல்வி தாமோதர் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தத் தோஷம் முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களைப் பாதிக்கும் என்றும், அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறாமல் போகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ., ஆன்மிகப் பிரிவு சார்பில் கோவை, சேலம், வேலூர் பெருங்கோட்ட மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷெல்வி தாமோதர், தமிழக கோவில்களின் நிலை குறித்து ஒவ்வொன்றாக விளக்கினார்.
முதலில் விருதுநகரில் கோவில் காவலாளிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், “இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டமே இருக்கு... உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை... வெளுக்கப்போகுது மழை...!
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் குறித்து அவர் கூறியதாவது: “இந்தக் கோவிலில் 30 ஆண்டுகளாக 150 கோடி ரூபாய் டெபாசிட் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது முழுவதும் காலியாகிவிட்டது. கோவில் பணத்தைச் செலவழிக்க நீதிமன்ற உத்தரவு, சட்ட விதிகள் இருந்தும் அவை மதிக்கப்படவில்லை. இது பெரிய மோசடி” என்றார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா குறித்து அவர் வேதனை தெரிவித்தார். “ஆகம விதிப்படி தலைமுறை தலைமுறையாக நடத்தப்படும் இந்த விழாவை நிறுத்தி வைத்துள்ளனர். இது பாரம்பரியத்திற்கு எதிரானது” என்றார்.
கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் இட ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியதாவது: “கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் நீதிமன்ற உத்தரவு வந்த பின்பும் காலி செய்ய மறுக்கின்றனர். ஹிந்து கோவில்களுக்கு மட்டுமே சட்டம் போடப்படுகிறது. மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு இல்லை” என்றார்.

தேவிகாபுரம் பெரிய நாயகியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து அவர் குற்றம் சாட்டினார். “ஆகம விதிக்கு மாறாக நந்தியம் பெருமானை உயர்த்தி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீப்பிடித்த மண்டபத்தைப் புதுப்பிக்காமலேயே கும்பாபிஷேகம் செய்துள்ளனர்” என்றார்.
இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்தால் அது 'ராஜகுற்றம்' என்ற தோஷத்தை ஏற்படுத்தும் என்று ஷெல்வி தாமோதர் எச்சரித்தார். “கோவில்களில் நடக்கும் இத்தகைய குளறுபடிகள் முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு ராஜகுற்ற த0ஷத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறாமல் போகும்” என்றார்.
தி.மு.க.,வுக்கு அறிவுரை வழங்கிய அவர், “கட்சியில் தெய்வீக நம்பிக்கை உள்ளவர்களையும் ஆன்மிக ஞானம் கொண்டவர்களையும் ஒரு குழுவாக அமைத்து, கோவில்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் தோஷம் அவர்களையே பாதிக்கும்” என்றார்.
ஜோதிட ரீதியாகவும் அவர் கணித்தார்: “தமிழகத்தில் டிசம்பர் 20 வரை குழப்பங்கள் நீடிக்கும். அதற்குப் பிறகுதான் அடுத்த முதல்வர் யார் என்பது தெரியவரும்” என்றார். இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பா.ஜ.,வின் ஆன்மிகப் பிரிவு கோவில் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: 20 அடி பள்ளம்... 2வது நாளாக தீவிரம்... பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி குறித்து கசிந்த முக்கிய தகவல்...!