இளைஞர்கள் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் (Reels) பழக்கத்திற்கு அடிமையாவது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து பல ஆய்வுகளும், சமூக ஊடகப் பதிவுகளும் கவலை தெரிவிக்கின்றன. இளைஞர்கள் ரீல்ஸ் பார்ப்பதற்கும், உருவாக்குவதற்கும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நேரத்தை பறிக்கிறது.

மேலும் ரீல்ஸின் குறுகிய, வேகமான உள்ளடக்கங்கள் மூளையில் டோபமைன் (Dopamine) அளவை அதிகரிக்கின்றன, இது ஒரு வகையான போதை உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் பொறுமை குறைவு, கவனச்சிதறல், மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை ஏற்படுகின்றன. ஆபத்தான முறையில் ரீல்ஸ் உருவாக்குவது (எ.கா., பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட், பொது இடங்களில் நடனம்) இளைஞர்களை விபத்துகளுக்கும், சட்டப் பிரச்சினைகளுக்கும் உள்ளாக்குகிறது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படை வேட்டை.. 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..
இந்நிலையில் ரீல்ஸுக்கு அடிமையான டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரியானாவில் அரங்கேறியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (வயது 25) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். ராதிகாவை அவரது தந்தை பலமுறை கண்டித்தும், அதையெல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் தந்தை மகளுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் மகளின் நடவடிக்கையால் தந்தை வருத்தமாக காணப்பட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் ராதிகா யாதவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவரது தந்தை ராதிகா யாதவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 5 முறை துப்பாக்கியால் சுட்டதில் 3 குண்டுகள் ராதிகா மீது பாய்ந்துள்ளது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராதிகா யாதவை அங்கிருந்தவர்கள், ஆபத்தான நிலையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ராதிகாவின் தந்தையைக் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருந்தார். மேலும் ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வந்தார். இரட்டையர் டென்னிஸ் வீராங்கனையாக ராதிகாவின் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில் 113வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இத்தனை கோடி கையாடலா..!! தூக்கில் தொங்கிய மேலாளர்.. பால் நிறுவனத்தில் நடந்தது என்ன..?