தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், ஆறு படைவீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில், உலகெங்கும் உள்ள முருகன் பக்தர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு, கடலில் புனித நீராடி செல்வது வழக்கம். இந்தக் கடல் நீராடல் தான் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
ஆனால், சமீப மாதங்களாக கோயில் அருகே கடல் அரிப்பு மிகத் தீவிரமடைந்துள்ளது. கோயிலின் கிழக்குப் பகுதியில் கடற்கரை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலின் அடித்தளம் பலவீனமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கடலில் இறங்கி நீராடுவதும் கடினமாகியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் டூர் கிளம்பும் ராகுல், பிரியங்கா!! தமிழக காங்., நிர்வாகிகள் அதிரடி! தொடரும் புகைச்சல்!
இந்தக் கடல் அரிப்புக்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, கோயிலில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு (groynes) ஆகும். இந்த வளைவுகள் கடல் நீரோட்டத்தை மாற்றி, கோயில் அருகே மண் அரிப்பை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் கடற்கரை பகுதி விரைவாக சுருங்கி வருகிறது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) மாநில இணைப் பொதுச்செயலாளர் சந்திரசேகரன், “தமிழக அரசின் செயல்பாடுகளாலும் தொடர் அலட்சியத்தாலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் அரிப்புக்கு உள்ளாகும் பெரும் ஆபத்தில் உள்ளது” என கடுமையாக குற்றம் சாட்டினார்.
தி.மு.க. அரசு கோயில்கள் தொடர்பான பிரச்னைகளில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் அவர் விமர்சித்தார். “இந்த அரிப்பு தொடர்ந்தால் கோயிலுக்கு பாதுகாப்பே இல்லாமல் போய்விடும். பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாத நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக கடலுக்குள் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். கோயிலைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் வி.ஹெச்.பி. சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
கடல் அரிப்பு பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசு ஏற்கெவே IIT மெட்ராஸ், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து பரிந்துரைகள் அளித்து வருகிறது. அரசு விரைவில் உரிய தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இப்பிரச்னை தொடர்ந்து அரசியல் சர்ச்சையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்களுக்கு ஃபுல் SAFETY-ப்பா..!! விஜய்யின் தரமான சம்பவம்..!! ஈரோடு கூட்டத்தில் இப்படி ஒரு ஏற்பாடா..!!