மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை உச்சியில் அதாவது, தர்கா அருகில் இருக்கக்கூடிய அந்த தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் பிரதான வழக்கு. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவில் இந்த தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அந்த உத்தரவை நிறைவு செய்வதற்கான அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். தமிழக அரசு உத்தரவை நிறைவேற்றாத பட்சத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.
கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததால், மனுதாரர்கள் தொடுத்த வழக்கில், மனுதாரர்கள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருடன் (CISF) சென்று தீபமேற்றலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார். இதையடுத்து, மனுதாரர் ராமரவிக்குமார், சக மனுதாரர்கள் மற்றும் இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுடன் நேற்று இரவு திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக அவர்கள் மலை உச்சிக்குச் செல்ல முயன்றபோது, அங்கு போலீசார் தடுப்புகளை அமைத்து அனுமதி மறுத்தனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை என்று கூறி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்புகளை உடைக்க முயன்றதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, தீபம் ஏற்றச் சென்ற பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்ததையடுத்து மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரும், இந்து அமைப்பினரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... பரபரக்கும் நீதிமன்றம்...!
திருப்பரங்குன்றம் கார்த்தி தீப விவகாரம் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறியதால், நேற்றிரவே தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் முறையிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று காலையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழக அரசின் மனு தள்ளுபடி:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையை அழைத்ததில் தவறிருப்பதாக தெரியவில்லை எனக்கூறி இருநீதிபதிகள் அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் வாதம்:
இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு கூடுதல் வழக்கறிஞர் வீராகதிரவன் சார்பில் ஆஜராகி தனி நீதிபதியினுடைய உத்தரவினுடைய முரண்பாடுகளை எடுத்துரைத்தார். குறிப்பாக ஒரு முக்கிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அந்த உத்தரவு நிறைவேற்றப்படாத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கான உச்ச நீதிமன்றத்தினுடைய வழிமுறைகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளை எடுத்துரைத்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபமேற்ற நீதிபதி அனுமதி வழங்கினார். ஆனால், மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் தாக்கப்பட்டனர், மதப் பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதே சிஐஎஸ்எஃப்-ன் பணி. அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத் தாண்டி மனுதாரருக்குப் பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. மத்திய தொழிலகப் பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு அளிக்க எப்படி உத்தரவிட முடியும்? உயர் நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது மட்டும் தான் சி.ஐ.எஸ்.எஃப்.-ன் வேலை என அடுக்கடுக்கான கேள்விகள் தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மனுதாரர்களக தர்கா தரப்பு இணைய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. குறிப்பாக நீதிமன்றத்தினுடைய அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நான்கு வார காலங்கள் அவகாசம் கொடுத்துள்ளது. அந்த 30 நாட்களில் உத்தரவு நிறைவேற்றாதற்கான காரணங்களையும் அதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பதில் மனுவாக தாக்கல் செய்வதற்கான போதிய கால அவகாசங்களும் உள்ளன. ஆனால் தனி நீதிபதி அதை கருத்தி கொள்ளவில்லை வழக்கு விசாரணை வந்து நேற்று 6 மணிக்கு வருகிறது. இந்த தீபத்தூண்டில் தீபம் ஏற்றப்பட்டதா அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று அரசு தரப்பில் கேட்கவில்லை மனுதாரர்கள் தரப்பில் நீதிபதி விசாரிக்கிறார். மனுதாரர் இல்லை என்று சொன்னவுடன் உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினுடைய கமாண்டாவை நீதிமன்ற அறைக்குள் வரவைத்து இந்த உத்தரவை பிறப்பிக்கிறார்.
இந்த உத்தரவு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட உத்தரவு போன்று உள்ளது. ஏனென்றால் நீதிபதி உத்தரவு பிறப்பிதற்கு முன்பதாகவே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நீதிபதியினுடைய அறைக்கு முன்புறம் குவிய தொடங்கி விட்டனர். எனவே இந்த உத்தரவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த உத்தரவினால் திருப்பரங்கு குன்றத்தில் மிகப்பெரிய ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. எனவே இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த தீபத்தூண் என்று சொல்லக்கூடியது ஒரு எல்லைக்கல், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னதாக தீபம் ஏற்றியதாக எந்த வரலாறும் இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. கீழமை நீதிமன்றங்கள் உரிமையில் நீதிமன்றம் விசாரித்த போதும் அதற்கான எந்த எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆனால் வழக்கமாக மோட்சத்தீபம் ஏற்றக்கூடிய இடத்தில் தமிழக அரசு சிறப்பாக அதனை ஏற்றியுள்ளது. அது குறிப்பிட்ட குறிப்பாக கார்த்திகை தீபத்து அன்று ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்றுவார்கள். ஆனால் தனி நீதிபதி இரண்டு இடத்தில் தீபம் ஏற்றுவதற்காக உத்தரவு குறிப்பிருக்கிறார்.
இந்து அமைப்பின் வாதங்கள்:
அதேபோல எதிர்மனுதாரர் ஆஜரான இந்து அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தனி நீதிபதியின் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்படாத பட்சத்தில் தான் நீதிமன்றத்தில் நாங்கள் அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதை தாக்கல் செய்தோம். அதனை தொடர்ந்து தான் தனி நீதிபதி இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காகத்தான் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதில் எந்தவித தவறும் இல்லை எனக்கூறி அவர்களும் பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முன்னுதாரணமாக காட்டினார்.
அடுக்கடுக்காக கேள்வி கேட்ட நீதிபதிகள்:
இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் தொடர்ந்து கேட்டறிந்தனர். அதுமட்டுமில்லாமல் நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக அரசு தரப்பில் ஏன் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை? உத்தரவு நிறைவேற்றாத பட்சத்தில் தானே தனி நீதிபதி இது போன்ற முடிவுகளை எடுத்தார்?, நீங்கள் ஏன் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? என கேள்விகளை எழுப்பினார்.
அதுமட்டுமில்லாமல் தர்கா தரப்பிற்கும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினார். ஒரு தீப தூணில் தீபம் வருடத்திற்கு ஒருமுறை ஏற்றப்படுவதால் உங்களுக்கு என்ன மத பிரச்சனை வந்துவிடப்போகிறது. அனைவரும் சேர்ந்துதானே ஒரு விழாவை கொண்டாட வேண்டும். தனித்தனியாக விழாக்களை கொண்டுவது என்பது மத நல்லிணக்கினம் கிடையாது என அவர்கள் தரப்பிலும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
எனவே மூன்று தரப்பு வாதங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும் கூடுதல் வாதங்கள் வைக்க வேண்டும் என்றால் எழுத்து பூர்வமான வாதங்களை
உடனடியாக தாக்கல் செய்யுங்கள் நீதிமன்ற நீதிபதியுடைய அறையில் இந்த தீர்ப்பு தீர்ப்புகளை தயார் செய்துவிட்டு சற்று நேரத்தில் இதற்கான தீர்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம் என்று கூறி தற்போது நீதிபதிகள் இரண்டு பேரும் தங்கள் அறைக்கு சென்றனர்.
இதையும் படிங்க: “மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - பாயிண்ட்டை பிடித்த தமிழ்நாடு அரசு... இந்து அமைப்பு Vs தர்கா நிர்வாகம் இடையே அனல் பறந்த வாதம்...!