நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) என்பவர், 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அரசு பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது உடலில் குட் டச், பேட் டச் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டபோது, பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. 14 நாட்களுக்கு பின் சிக்கிய காம அரக்கன்..!!
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து செந்தில்குமார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் (குண்டாஸ்) பாய்ந்தது. இதனால், செந்தில்குமார் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டம், கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோரை ஒரு ஆண்டு வரை ஜாமீன் இன்றி சிறையில் அடைக்க அனுமதிக்கும் சட்டமாகும். இச்சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசு, பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்கள் மற்றும் கல்வித்துறை உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. சிறுமியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த நிகழ்வுக்கு நயினார் கண்டனம்..!