திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த 12ம் தேதி 8 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை பின்தொடர்ந்து சென்று கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் 4 கூடுதல் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் இருந்தும், 10 நாட்கள் கடந்தும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறிய போலீசார், இவ்வழக்கு விசாரணைக்கு உதவியாக, மர்ம நபரை அடையாளம் காணவும், துப்பு துலக்கவும் பயனுள்ள குறிப்பிடத்தக்க மற்றும் நம்பகமான தகவல்கள் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும் குற்றவாளியின் புகைப்படத்தை போட்டு, 4 மொழிகளில் போஸ்டர் தயாரித்து ஆங்காங்கே ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில் 9952060948 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து 13 நாட்களுக்கும் மேலாக குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர்தான் என சிறுமி அடையாளம் காட்டவே, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய குற்றவாளியிடம் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கைதானவன் வேலை பார்த்து வந்த சூலூர்பேட்டையில் உள்ள ஹரியானா - ராஜஸ்தான் தாபாவில் போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த இளைஞர் 15 நாட்களுக்கு முன்னர் தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு கைதான நபரின் ஆடைகள், ஆதார் அட்டைகள் உள்ளிட்ட தடயங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த நபரின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கைதான நபரை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: தவெக மதுரை மாநாடு! எத்தனை ஏற்பாடுகள் செய்கிறீர்கள்? காவல்துறை அடுக்கடுக்கான கேள்வி!