தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, ஆளுநர் ஆர்.என். அர்லேக்கருக்கு புகார் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக எம்.எல்.ஏ. பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்த சம்பவத்தை இந்தப் புகாருக்கு முக்கிய ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1-ம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த பாரதி, முதலமைச்சர் விஜய் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுப்பதாகக் கூறினார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து, அதே புகாரை மின்னஞ்சல் மூலம் ஆளுநருக்கு அனுப்பியதோடு, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கும் நகல் அனுப்பி நடவடிக்கை கோரியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தங்கள் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள், இந்த இணைப்புக்கு த.வெ.க. தரப்பிலிருந்தே அணுகல் வந்ததாக வெளிப்படையாகத் தெரிவித்தனர். குறிப்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில், “நாங்களாக வரவில்லை. த.வெ.க. எங்களை அணுகியது” என்று கூறியது, குதிரைப் பேரம் நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரம் என தி.மு.க. தரப்பு வாதிடுகிறது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் குதிரை பேரம் விவகாரம்..! முன்ஜாமீன்.? அசோக் குமார் மனு மீது ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கே இதுவே காரணம். அதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன” என்றார். முன்பு கரூர் சம்பவம் தொடர்பாகவும் புகார் அளித்ததாக நினைவூட்டிய அவர், “கடந்த 4-ம் தேதி ஆளுநரை மீண்டும் சந்தித்து விவரித்தோம்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டதாக” கீழ்தரமான வகையில் பேசுவதாகவும் முதலமைச்சர் விஜய்யின் பேச்சு முறையைக் கடுமையாக விமர்சித்தார். விஜய் கீழ்த்தரமாக பேசினால், இனி நாங்களும் இப்படி பேச வேண்டி வரும். இனிமேல் கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் குறித்து பேச வேண்டாம். இதற்கு பதில் சொல்லும்போது முக்கியமான பிரச்சனைகள் பேசப்படாமல், திசை திரும்பி விடுகிறது. இப்படித்தான் கடந்த தேர்தலின் போது செத்த பாம்பை அடித்து விட்டு, கரு நாகத்தை விட்டு விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் மற்றும் சி.பி.ஐ. தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..' எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி ஓபன் டாக்!