உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. மூன்றாவது இடத்தில் சீனா இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு பிற நாடுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார். குறிப்பாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போரும் அரசியல் சலசலப்பும் ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேரடியாகச் சந்தித்துப் பேசினர். இது கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு என்பதால் உலகக் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்தச் சந்திப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு டிரம்ப் ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்.
டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: அமெரிக்காவிடம் எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. என் முதல் ஆட்சிக் காலத்தில் இவற்றை முழுமையாக நவீனப்படுத்தினேன். அதனால்தான் இன்று நாம் முதலிடத்தில் இருக்கிறோம். அணு ஆயுத எண்ணிக்கையில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்... எடப்பாடியை சீண்டும் KAS...!
ஆனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் சீனாவிடமும் நம்மைப் போன்றே சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கும். மற்ற நாடுகள் தொடர்ந்து அணு சோதனைகளை நடத்தி வருகின்றன. எனவே நாமும் சம அளவில் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக போர்த் துறை உடனடியாக நடவடிக்கை தொடங்கும். இது இப்போதே தொடங்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் கடைசி அணு சோதனை 1992 செப்டம்பர் 23 அன்று நெவாடா பாலைவணத்தில் நடைபெற்றது. அதன்பிறகு 33 ஆண்டுகளாக எந்த அணு சோதனையும் நடத்தப்படவில்லை. இப்போது டிரம்பின் உத்தரவால் மீண்டும் அணு சோதனை தொடங்கப்பட உள்ளது.
இந்த உத்தரவு சீனாவின் வேகமான அணு ஆயுத வளர்ச்சியை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. சீனா 2020-இல் 350 அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தது. 2030-ஆம் ஆண்டுக்குள் 1,000-க்கும் மேல் ஆயுதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யா சமீபத்தில் ‘புரெவெஸ்ட்னிக்’ அணு ஏவுகணை மற்றும் ‘போஸிடான்’ அணு நீர்மூழ்கி ட்ரோன் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. இவை அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவு புதிய அணு ஆயுதப் போட்டியைத் தொடங்கும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சீனா இதை ‘போர் மனநிலை’ என்று விமர்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் - ஜி சந்திப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் இந்த அணு சோதனை உத்தரவு உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை என்று டிரம்ப் தரப்பு கூறினாலும் உலக அமைதிக்கு இது பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு வைத்த புடின்! செயற்கை சுனாமியை உருவாக்கும் அணு ஆயுதம்! ரஷ்யாவின் கடல் அரக்கன்!