தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்.
நேற்று வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை "துரோகி" என்று கடுமையாக விமர்சித்து வந்த தினகரன், இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் மீண்டும் அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்துள்ளார்.
இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய தினகரன், "தமிழ்நாட்டின் நலனுக்காக பங்காளி சண்டையை ஓரங்கட்டிவிட்டோம். விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போக மாட்டோம். கவுரவமான இடங்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி" என்று கூறினார்.
இதையும் படிங்க: கூட்டணியில் இணைந்த டிடிவி!! நேரில் சந்திக்க முரண்டு பிடிக்கும் எடப்பாடி! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எடப்பாடி பழனிசாமியும் தினகரனை வரவேற்று, "கூட்டணி வலுப்படும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுகவுடன் இணைந்த நிலையில், தினகரன் வருகை என்டிஏ கூட்டணிக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என்று பாஜக-அதிமுக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தினகரன் வருகையின் தாக்கம் என்ன? தென் தமிழகத்தில் முக்குலத்தோர் (தேவர்) சமுதாய வாக்குகளில் தினகரனுக்கு செல்வாக்கு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக இருவரையும் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அப்போது 50.32% வாக்குகளை பெற்றார். 2016-இல் ஜெயலலிதா 39,357 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அதே தொகுதியில் தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கவனம் ஈர்த்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டு 5.38% வாக்குகளை பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக-தேமுதிக கூட்டணி 2.3% வாக்குகளை பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த அமமுக 0.90% வாக்குகளை மட்டுமே பெற்றது.
ஆனால் தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை எதிர்த்து போட்டியிட்ட தினகரன் 2-ஆம் இடம் பிடித்து அதிமுகவை 3-ஆம் இடத்திற்கு தள்ளினார்.
வாக்கு சதவீதம் குறைந்தாலும், தினகரன் வருகை தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு சிதறலை தடுக்கும் என்று என்டிஏ தலைவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் (ஜனவரி 23) பிரதமர் மோடி முன்னிலையில் தினகரன் மேடையில் இருப்பது கூட்டணியின் ஒற்றுமையை காட்டும். ஓ.பன்னீர்செல்வம் அணி பலவீனமடைந்துள்ள நிலையில், தினகரன் இணைப்பு என்டிஏவுக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தரப்பில் இதை "கூட்டணி குழப்பம்" என்று கருதினாலும், தேர்தல் களம் இப்போது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. தினகரன்-எடப்பாடி இடையேயான உறவு எப்படி இருக்கும்? தென் தமிழக வாக்குகள் என்டிஏவுக்கு செல்லுமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகின்றன.
இதையும் படிங்க: எங்களுக்கு 12 சீட்டு கொடுத்திருங்க!! அதிமுக - பாஜக கூட்டணிக்கு தமாக நெருக்கடி!! வாசன் புது ரூட்!!