பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் இந்த கட்டண கொள்ளையால் கடும் இன்னலுக்கு ஆளாவதாக கூறப்பட்டு வருகிறது. இதனிடையேபொங்கல் திருநாளையொட்டி பன்மடங்கு உயர்ந்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டு தவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பன்மடங்கு அதிகரித்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 700 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1400 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும் உயர்ந்திருப்பதாகப் புகார் எழுந்திருப்பதாக சுட்டி காட்டினார்.
இதையும் படிங்க: ஆம்னி பஸ் கட்டண கொள்ளை... மக்கள் புகார் கொடுக்க முன் வருவதில்லை..! அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்..!
தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் இதுபோன்ற கட்டணக் கொள்ளை நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: திக்... திக்...!! - அந்தரத்தில் தொங்கிய ஆம்னி பேருந்து - மரண பீதியில் கதறிய பயணிகள் - 35 பேரின் நிலை என்ன?