சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையிலான கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக வி.சி.க. தலைவர் திருமாவளவனை தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளை தன் பக்கம் ஈர்த்துள்ளது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க. பக்கம் சாய்ந்துள்ளன.
நேற்று முன்தினம் சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் விஜய் இந்தக் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கு ‘நட்புறவு சக்திகள் சந்திப்பு’ என்று த.வெ.க. தலைமை பெயர் சூட்டியிருந்தது.
இதையும் படிங்க: பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?
முன்பு ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ என்ற பெயரில் தி.மு.க. தலைமையில் இயங்கிய இந்தக் கட்சிகள், தற்போது த.வெ.க.வுடன் இணைந்துள்ள நிலையில் புதிய பெயர் ஒன்றைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘தமிழக வெற்றிக்கான சமூக நீதி கூட்டணி’ உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளர் யார் என்பதில் தற்போது குழப்பம் நிலவுகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ மூத்தவர் என்பதால் அவரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என அக்கட்சி விரும்புகிறது.
ஆனால் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமூக நீதிக்கு அடையாளமான திருமாவளவனை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளார். இந்த யோசனைக்கு பல கட்சித் தலைவர்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணியின் அடுத்தக் கூட்டத்தை இம்மாதம் மூன்றாவது வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் கூட்டணிக்கு பொருத்தமான பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. த.வெ.க. தலைவரும் முதல்வருமான விஜயை கூட்டணியின் தலைவராக அறிவிக்கும் திட்டமும் உள்ளது.
இந்த மாற்றங்கள் தமிழ்நாட்டு அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!