தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) புதிய பிரச்னை ஒன்று எழுந்துள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த நான்கு எம்.எல்.ஏ.க்களுக்கு வரும் இடைத்தேர்தலில் சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயகுமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி மீது அதிருப்தி அடைந்து ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு இடைத்தேர்தலில் சீட் வழங்க த.வெ.க. தலைமை தயங்குவதாகக் கூறப்படுகிறது.
த.வெ.க. மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தபடி, தற்போது சபாநாயகரைத் தவிர 106 எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 119 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு கூட்டணிக் கட்சிகள் மீது முழு நம்பிக்கை இல்லை. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் சீட் வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தொகுதிகளில் இவர்களின் பெயர் மோசமான சர்வே முடிவுகளைக் காட்டுவதால் மீண்டும் இவர்களுக்கே சீட் கொடுத்தால் தோல்வி ஏற்படும் என த.வெ.க. தலைமை அஞ்சுகிறது.
இதையும் படிங்க: யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் விரும்புகிறார். எனவே, அவர்களுக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்க முயற்சி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. இதை எதிர்பாராத நால்வரும் தங்களை ஏமாற்றியதாகக் கூறி, தங்களை அழைத்து வந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
த.வெ.க.வில் புதியவர்களுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பதால் பழைய நிர்வாகிகளிடையே ஏற்கெனவே அதிருப்தி நிலவும் நிலையில், இந்த சம்பவம் கட்சிக்குள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் இந்த நான்கு தொகுதிகளிலும் யாருக்கு சீட் வழங்கப்படும் என்பது விரைவில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் த.வெ.க.வின் உள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: தவெகவில் ஐக்கியமா..? பட்டென போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!!