தமிழக வெற்றிக் கழகம் வட மாவட்டங்களில் வன்னியர் சமூக ஓட்டுகளை தீவிரமாக குறிவைத்து தனது அரசியல் திட்டங்களை வகுத்து வருகிறது. சட்டசபைத் தேர்தலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய த.வெ.க., வட மாவட்டங்களில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
குறிப்பாக வன்னியர் மக்கள் அதிகம் வாழும் அரியலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. இந்தப் பகுதிகளில் பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணி 32 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
தேர்தலுக்கு முன்பு பட்டியலின மக்களின் ஓட்டுகளை மட்டுமே நம்பி, அம்பேத்கரை கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்பட்டதே இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தேர்தலுக்குப் பின் வி.சி.க.வுடன் இணைந்ததால், வட மாவட்டங்களில் வன்னியர் சமூக ஓட்டுகள் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இந்த நிலையை சரி செய்ய 'ஆப்பரேஷன் நார்த்' என்ற புதிய வியூகத்தை த.வெ.க. தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: என்ன SCRIPT ரெடியா முதலவரே..? அலட்சியம் அப்பட்டமா தெரியுது..! விஜயை விளாசிய திமுக..!!

இதன் முதல் கட்டமாக, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மூலம் வன்னியர் சமூக பிரமுகர்களை கட்சிக்குள் இழுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பா.ம.க.வை பலவீனப்படுத்தினால்தான் வட மாவட்டங்களில் த.வெ.க. வளர முடியும் என்பதால், அந்தத் திசையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க. மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் த.வெ.க.வில் இணைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய் இதுவரை பா.ம.க. தலைவர் அன்புமணியை நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. அவரை விமர்சித்தால் அந்த சமூகத்தினர் மத்தியில் அன்புமணி இன்னும் வலுப்பெறுவார் என்பதால் இந்த உத்தியை கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கரூர் மற்றும் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, முதல்வர் விஜய் விரைவில் தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நேரில் சென்று புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார். இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் 2029 லோக்சபா தேர்தலில் வட மாவட்டங்களை முழுமையாக கைப்பற்ற த.வெ.க. திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: "தூய சக்திக்கு அர்த்தம் தெரியுமா விஜய்"..? திமுகவின் நீட்சியே தவெக... வெளுத்துவிட்ட H. ராஜா..!!