தமிழக வெற்றிக் கழகம், நடிகர் விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழ் தேசியம் மற்றும் பெரியாரின் திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தி இந்தக் கட்சி செயல்படுகிறது. முதல் மாநாடு 2024 அக்டோபரில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் கொடி, பெயர் விளக்கம் மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.
இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த தவெக முடிவு செய்தது, இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே 600 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டது.

எனினும், மாநாட்டில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடுமையான வெயில் பெரும் சவாலாக அமைந்தன. முதல் மாநாட்டில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை குறித்த விமர்சனங்களை அடுத்து, இந்த மாநாட்டில் 750 குழாய்கள் மற்றும் RO பிளாண்ட் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், தொண்டர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டதாகவும், கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: “யாரை பார்த்து அணில்-ன்னு சொன்ன” - மதுரை மாநாட்டில் சீமானை சிதறவிட்ட தவெக தொண்டர்கள்...!
மாநாட்டுத் திடலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்ததால், தொண்டர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, இது கடும் வெயிலில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாநாட்டில் வந்திருந்த 375 பேருக்கு தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மாநாட்டில் இருந்த மருத்துவ குழு முதலுதவி சிகிச்சை அளித்தது. வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள மாநாட்டில் வழங்கப்படும் குளிர்பானங்கள் வாங்க தொண்டர்கள் முண்டியடித்தனர். மேலும் மயங்கி விழுந்தவர்களின் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் 40 அடி கொடிக்கம்பம்... தயார் நிலையில் பாரபத்தி!