தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதார் பதுருதீன் என்கிற முஸ்தபா, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றில் முதன்முறையாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தான் தொப்பி அணிந்தபடியே சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
“இதுவரை இல்லாத வகையில் இந்த மரியாதை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொலைபேசி வாயிலாக பலர் என்னைத் தொடர்புகொண்டு, சிறுபான்மையினரின் பாதுகாப்பாளராகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய அரசாகவும் வெற்றி தளபதியின் அரசு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவிக்கின்றனர்,” என்று முஸ்தபா கூறினார்.
இஸ்லாமியர்களுக்கு வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் முன்னேற்றம் வேண்டுமானால் அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய வாய்ப்பை வெற்றி தளபதியின் அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழக வெற்றி கழகத்தை ஏ டீம், பி டீம், சி டீம் என விமர்சித்தவர்கள் உண்மையான இஸ்லாமிய பாதுகாவலர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!
கடந்த காலங்களில் அமைச்சர் பதவிக்காக பாஜகவையும் வாஜ்பாயையும் தேடிச் சென்றவர்கள் இப்போது விமர்சனம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். திமுகவில் சாதிக் பாஷா, ரஹ்மான் கான் உள்ளிட்ட இஸ்லாமியத் தலைவர்கள் இருந்தபோதிலும் உரிய அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தமிழக வெற்றி கழகம் மட்டும்தான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் உண்மையான அங்கீகாரத்தை அளித்து வருவதாக வலியுறுத்தினார்.

சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டிய முஸ்தபா, “உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் தொடர்ந்து அதே மனநிலையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, இங்கு விடுதலை செய்வோம் என்று பேசுவது பச்சையான பச்சோந்தித்தனம்” என்று தாக்கினார். 1999 மார்ச் 23 அன்று முற்பகல் 11.40 மணியளவில் இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டவர்களே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பேசிய ஆதாரங்களை சபாநாயகரிடம் காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சமூக மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு குறைந்ததால் இப்போது பாதுகாவலன் வேடம் போடுவதாக அவர் குற்றம்சாட்டினார். “உண்மையான சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக வெற்றி தளபதி இருக்கிறார் என்பதற்கு நானே சான்று,” என்று முஸ்தபா தனது உரையை முடித்தார்.
இதையும் படிங்க: தவெக நிகழ்ச்சிக்கு தெருவோரக் கடைகள் அப்புறப்படுத்துவதா?: சிபிஎம் ஜி.செல்வா கண்டனம்!