தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களையும் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களையும் விஜய் வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டும் வெறும் அறிக்கையை மட்டும் விஜய் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் தங்களை வந்து விஜய் ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விகளும் எழுந்தது. விஜயின் சென்னை நீலாங்கரை வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் எதிரொலி! தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு…!
அதுமட்டுமல்லாது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட யாரையும் விஜய்யின் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் 36 மணி நேரம் கழித்து விஜய் தனது வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அவர் எங்கே செல்கிறார் என்று உண்மையான நிலவரம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு விஜய் செல்வதாக தகவல் வெளியானது. விஜய் தனது பாதுகாவலர்களிடம் கூட சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை பாதுகாவலர்கள் பின்தொடர்ந்து சென்றதாக சொல்லப்பட்டது.
இதனிடையே விஜயின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு விஜய் சென்றுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை விஜய் சந்திக்காத நிலையில் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு மாறி உள்ளார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாவட்ட செயலாளர் தலைமறைவு... தவெக நிர்வாகிகள் செல்போன் "SWITCH OFF"...! என்னதான் நடக்குது?