நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், குறிப்பாக புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கு அத்தியாவசியமான 17 வகை உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சில மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அடிப்படை சுங்க வரி (Basic Customs Duty) முழுமையாக நீக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நடவடிக்கை மூலம், இந்த மருந்துகளின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த மருந்துகளுக்கு அதிக சுங்க வரி விதிக்கப்பட்டு வந்ததால், சிகிச்சை செலவு மிக அதிகமாக இருந்தது. இதனால், நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் உட்பட பலரும் பெரும் நிதிச் சுமையை சுமந்து வந்தனர்.
இதையும் படிங்க: விபத்து இழப்பீட்டுக்கு வரி இல்லை! பட்ஜெட் 2026-ல் சாமானியர்களுக்கான வருமான வரி அதிரடிகள்!
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பல உயர்தர மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இவை பெரும்பாலும் காப்புரிமை (பேட்டன்ட்) பாதுகாப்புடன் இருப்பதால், உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் சில ஆண்டுகள் வரை அவற்றை உற்பத்தி செய்ய முடியாது. எனவே, இறக்குமதி மருந்துகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய சூழலில் சுங்க வரி விலக்கு அளிப்பது, நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை பெற உதவும் மிக முக்கியமான தீர்மானமாகும். இந்த அறிவிப்பு நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஏற்படும் பாரிய செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான புற்றுநோய் நோயாளிகள் பயனடைவார்கள் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதே போன்று 7 கூடுதல் அரிய நோய்களுக்கான (ரேர் டிசீஸ்) மருந்துகள், சிறப்பு மருத்துவ உணவுகள் ஆகியவற்றின் தனிப்பட்ட இறக்குமதிக்கும் சுங்க வரி விலக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுகாதாரத் துறையில் அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

இந்த பட்ஜெட் அறிவிப்பு, புற்றுநோய் சிகிச்சையை மேலும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும் ஆக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, குடும்பங்களின் பொருளாதார சுமையை கணிசமாகக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்! பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான அறிவிப்புகள்!