தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தீவிர பிரசாரம் மற்றும் திட்ட அறிவிப்புகளுடன் முன்னேறி வரும் போது, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்க உள்ளது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் த.வெ.க. செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த முக்கிய கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்றுள்ளார்.
கூட்டத்திற்கு விஜய் மேடைக்கு வந்தவுடன், தொண்டர்கள் விசில் அடித்து, கோஷங்களுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். சுமார் 3,000-க்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பங்கேற்பாளர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது டிஜிட்டல் QR கோடு கொண்ட அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இந்த ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பாஜக - அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக! இரண்டாக பிரியுதா காங்கிரஸ்? செங்கோட்டையன் பதில்!!

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் எந்த பொது நிகழ்விலும் பங்கேற்கவில்லை. ஜனநாயகன் பட விவகாரம், சிபிஐ விசாரணை உள்ளிட்ட சில சர்ச்சைகளால் அவர் மவுனம் காத்து வந்த நிலையில், இன்றைய கூட்டம் த.வெ.க.வின் தேர்தல் உத்திகளை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கூட்டணி அமைப்பதா? தனித்து போட்டியிடுவதா? தேர்தல் அறிக்கை, பிரசார திட்டங்கள், தொகுதி பங்கீடு, சுற்றுப்பயணம் போன்றவை குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக-வின் மகளிர் திட்டங்கள், அதிமுக-வின் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார தேரை போன்றவை மக்களிடையே கவனம் ஈர்த்து வரும் நிலையில், விஜய் தரப்போ சாத்தியமான, நடைமுறைக்கு ஒத்த திட்டங்களை மட்டுமே அறிவிப்போம் என உறுதியளித்து வருகிறது. பனையூரில் நடைபெற்ற முந்தைய ஆலோசனைக் கூட்டங்களைத் தொடர்ந்து இந்த மாமல்லபுரம் கூட்டம் த.வெ.க.வின் வெற்றி வழியை தெளிவுபடுத்தும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் விஜய் ஆற்றவுள்ள உரை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களின் உற்சாக வரவேற்பு த.வெ.க.வின் அடித்தள வலிமையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த ஆலோசனை கூட்டம் தமிழக அரசியலுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: திமுக - அதிமுக இடையே தான் போட்டியே!! தடுமாறுது தவெக! அரசியல் ஆட்டத்தில் அவுட் ஆன விஜய்!