சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் கூட்டணி முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் எடுக்கும் இறுதி முடிவை அறிந்த பின்னரே தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பது என்று தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா, அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே நேரத்தில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அ.ம.மு.க. பொதுக்குழுவில், கூட்டணி தொடர்பான முடிவெடுக்கும் முழு அதிகாரம் பொதுச்செயலர் தினகரனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு அ.ம.மு.க. த.வெ.க.வுடன் கூட்டணி சேரும் என்றும், மீண்டும் தே.ஜ. கூட்டணியில் இணையும் என்றும் இரு தரப்பு ஊகங்கள் எழுந்தன.
அதேபோல், தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா முன்பு “கடலூரில் ஜனவரி 9-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும்” என்று கூறியிருந்தார். ஆனால் அந்த மாநாட்டில் பேசிய பிரேமலதா, “ஆளுங்கட்சியும் ஆண்ட கட்சியும் இன்னும் கூட்டணியை அறிவிக்காத நிலையில் நாம் மட்டும் ஏன் அறிவிக்க வேண்டும்?” என்று புதிர் போட்டு ஒதுங்கிக்கொண்டார்.
இதையும் படிங்க: திமுக வேணவே வேணாம்! விஜய் கூட பரவாயில்லை!! ராகுல்காந்திக்கு காங்கிரசார் எழுதிய கடிதம்!

இதற்கிடையே தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் பன்னீர்செல்வம் யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற கேள்வி இன்னும் விடையில்லாமல் நீடிக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள பன்னீர்செல்வத்தை த.வெ.க. கூட்டணியில் இணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் சமீபத்தில் வெளியிட்ட கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. “தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கின்றன. அந்த 30 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும்” என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் தற்போது பிரேமலதா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் த.வெ.க. தலைவர் விஜய்யின் இறுதி முடிவுக்காக மதில் மேல் பூனையாக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. தை மாதத்தில் எந்த நாளில் எந்த அறிவிப்பு வரும் என்பதை தமிழக அரசியல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 50 தொகுதி, துணை முதல்வர், அமைச்சர் பதவி!! தவெகவுடன் கூட்டணி வைக்க டெல்லி செல்லும் காங்., குழு!