சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, காங்கிரஸ் - த.வெ.க. இடையே கூட்டணி இறுதியாகிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் பரவின. இந்நிலையில், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவரும், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் தான் விஜயை சந்தித்ததாக உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாவது: “இந்த சந்திப்புகளை நான் தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. கடந்த ஆறு மாதங்களில் நான் செய்த அனைத்து நடவடிக்கைகளும் காங்கிரஸ் தலைமையின் முழு சம்மதத்துடனும் ஒப்புதலுடனும் தான் நடைபெற்றன. கட்சியின் நலனுக்காக விமர்சனங்களை எதிர்கொள்ளவும், பலிகடாவாக மாறவும் நான் தயாராக இருந்தேன்” என்றார்.
மேலும், “விஜயுடன் நடைபெற்ற சந்திப்பில் மற்றொரு மூத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியும் பங்கேற்றார்” என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசியல் குறித்து விஜயுடன் பேசியதாகவும், ஆனால் கூட்டணி அமைப்பது குறித்து முறையான பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்பதற்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்தார்.
இதையும் படிங்க: சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!

தி.மு.க.வுடன் கூட்டணியில் ஆட்சியில் பங்கு கோரிக்கையை கைவிட்டு ஸ்டாலின் எப்படி காங்கிரஸை சம்மதிக்க வைத்தார் என்பது குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில் காங்கிரஸ் அனுமனைப் போன்றது. அதற்கு தன் சொந்த பலம் தெரியாது. இம்முறை கட்சியை புதுப்பித்து, மீண்டும் கட்டமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக நாங்கள் நினைத்தோம்” என்று பிரவீன் சக்கரவர்த்தி பதிலளித்தார்.
காங்கிரஸ் தொண்டர்கள் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று உணர்வதாகவும், தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி நிலவுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். “தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை” என்றும் அவர் கூறினார்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய பிரவீன், “இது கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும். த.வெ.க. ஓட்டுகளை பிரிக்கும். இது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று மதிப்பீடு செய்தார்.
இந்த பேட்டி தி.மு.க. - காங்கிரஸ் உறவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் உள்ள உள்ளார்ந்த அதிருப்தி வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!