மின்வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒருமுறை சிறப்பு வயது தளர்வு வழங்க வேண்டும் என்று We the Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாக தாமதம் மற்றும் தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பல தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு 2020-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2022-ஆம் ஆண்டு நிர்வாக காரணங்களைக் குறிப்பிட்டு அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது. தொடர்ந்து, இந்தப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், நீண்ட காலம் எந்த புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பின்னர், ரத்து செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் 195 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2020 முதல் இந்த பணிக்காக தயாராகி வந்த பலருக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!

மேலும், வயது வரம்பில் தளர்வு கோரி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, பணிநியமன கலந்தாய்வுக்கு முன்பாகவே வயது வரம்பைக் காரணம் காட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்ற சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2019 முதல் 2024 வரை இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், நிர்வாக தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயது தளர்வு வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் TNPSC நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்புகள் மூலம் விதிமுறைகள் அல்லது பணியிடங்களை மாற்றும் நடைமுறைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் நிர்வாக அலட்சியத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!