தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்திய ஜனநாயகக் கட்சியின் (IJK) நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஐஜேகே போட்டியிட விரும்பும் 7 தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளோம். எங்களுக்குச் செல்வாக்குள்ள மற்றும் சாதகமானத் தொகுதிகளைக் குறிப்பிட்டுள்ளோம் எனப் பாரிவேந்தர் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுடனும் கலந்து பேசி, தொகுதிகளை இறுதி செய்து ஒதுக்குவதாக எடப்பாடியார் உறுதியளித்திருப்பதாக ரவி பச்சமுத்து குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மிக முக்கியமாக, இந்தத் தேர்தலில் அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடாமல், தங்களது கட்சியின் தனிச் சின்னத்திலேயே (மோதிரம்) போட்டியிடப் போவதாக ஐஜேகே தலைமைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதிமுக தலைமையிலானக் கூட்டணியில் ஐஜேகே அங்கம் வகிப்பது இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் உள்ளிட்ட டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் ஐஜேகே-வுக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை அடுத்த சில நாட்களில் இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியலில் இன்னும் கத்துக்குட்டி.. பாஜவுக்கு முரட்டு அடிமை என விமர்சித்த உதயநிதிக்கு இபிஎஸ் தக்க பதிலடி..!!