மேற்கு வங்காளத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை கனத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எண்ணப்பட்டு வருகின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சிக்கு எதிரான போக்கு தொடக்கத்தில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஏற்கெனவே மம்தா பானர்ஜியின் தலைமையிலான டிஎம்சிக்கு சவால் விடுத்திருந்த நிலையில், ஆரம்ப முன்னிலை நிலவரங்கள் அந்த கணிப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதன் பிறகு 8:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈவிஎம்) மூலம் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. முதல் சில சுற்றுகளிலேயே பாஜக தலைமையிலான கூட்டணி பல தொகுதிகளில் தெளிவான முன்னிலையைப் பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இடதுசாரிக் கட்சிகள் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து, ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன.

குறிப்பாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் அவர் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தார். அவரை எதிர்த்து பாஜகவின் சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருக்கிறார். அதேபோல், நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வலுவான முன்னிலையைத் தக்க வைத்துள்ளார். காலை 11 மணி நிலவரம்பெரும்பான்மைக்குத் தேவையான 148 தொகுதிகளைவிட அதிகமான 186 தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தொழில்துறை மற்றும் நகர்ப்புற மண்டலங்களில் பாஜக கணிசமான இடங்களை கைப்பற்றும் போக்கு தென்படுகிறது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம்... கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம்... சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்...!
திரிணாமுல் காங்கிரஸ் 105 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுவதை இந்த ஆரம்ப முடிவுகள் பிரதிபலிக்கின்றன. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை வாக்குகளாக மாறியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வராத நிலையில், இந்த முன்னிலை நிலவரங்கள் மேற்கு வங்காள அரசியலில் பெரும் மாற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன. பாதுகாப்பு படையினர், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு எச்சரிக்கையுடன் களத்தில் நிற்கும் நிலையில், இறுதி முடிவுகள் எப்படி அமையும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!