தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களிடம் கோடி கோடியாகப் பணத்தையும் அமைச்சர் பதவியையும் தருவதாகக் கூறிப் பேரம் பேசிய அந்த 'இரண்டு சார்' யார் என்பது குறித்து இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிப்பாரா என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான காரசார விவாதங்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றவுள்ள அரசியல் சூழலில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. அதில், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் ஆட்சி பெரும்பான்மை விவகாரத்தில் ஆளுங்கட்சியின் பின்னணி செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கியுள்ளார்.
தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாமூல் வசூலிக்கும் போட்டியிலே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதத் தகராறில், தவெக நிர்வாகியான ரவுடி கண்ணன் நேற்று பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி சட்டம் - ஒழுங்கைச் சந்தி சிரிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: 3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

ஆனால், அதைவிடப் பேரதிர்ச்சியாகத் தமிழ்நாடு சட்டமன்றத்திலே ஆளும் தவெக தனிப் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியதன் பின்னணியில் இருந்த அதிர வைக்கும் ரகசியத்தை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சையது பாரூக் பாஷா அவர்கள் தேங்காய் உடைப்பது போல் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏவின் கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், என்னையும் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகானையும் சந்தித்து கோடி கோடியாகப் பணத்தை எடுத்து வந்து தருகிறோம், கையெழுத்துப் போடுங்கள் என்றார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வேண்டுமா என்று இரண்டு பேர் எங்களிடம் வெளிப்படையாகவே கேட்டார்கள்' என்று கூறி எம்எல்ஏ சையது பாரூக் பாஷா தமிழக அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளார்.
அப்படியானால், கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக்கொடுத்து அமைச்சர் பதவிகளைத் தாரைவார்க்க வந்த அந்த 'இரண்டு சார்' யார் என்பதற்கு, 'திங்கட்கிழமை வருகிறேன்' என்று வசனம் பேசிச் சென்ற முதலமைச்சர் இன்று சட்டமன்றத்திலே மக்களுக்கு மண்டையைக் கழுவாமல் நேர்மையாகப் பதிலளிப்பாரா? இது எந்த வகையான குதிரை பேரத்தின் கீழ் வருகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கப் போகிறாரா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து தவெகவின் ஆட்சி முறை குறித்துத் தாக்கிய அவர், தூய்மையான நல்லாட்சி தருவதாகச் சொல்லி அரியணையில் அமர்ந்த முதல்வர் விஜய், தவெக ஆட்சியைத் தூய்மையான வழியில்தான் பெரும்பான்மை பெற்று நிலைநிறுத்தினாரா அல்லது பெரும்பான்மைக்காக இத்தகைய சிறுபிள்ளைத்தனமான குதிரை பேரங்களை நடத்தி முடித்தாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இன்றைக்குத் தன்னை பிரதமர் வேட்பாளராக நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் விஜய், தமிழ்நாட்டில் எகிறி நிற்கும் விலைவாசி உயர்வு, சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கட்டுக்கடங்காமல் புழங்கும் போதைப் பொருள் நடமாட்டம், கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த உருப்படியான நடவடிக்கைகள் என்ன என்பதை சட்டமன்றத்தில் விளக்குவாரா? அல்லது வழக்கம்போல வசீகர வசனங்களையும் கவர்ச்சியான பஞ்ச் டயலாக்குகளையும் அதிரடியாகப் பேசி மக்களைப் பஞ்சர் ஆக்கிவிடுவாரா? என்று சாடியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சட்டமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்துள்ள தொடர் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சமூகக் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு மேற்கொண்ட உறுதியான நிலைப்பாட்டை மக்களை ஏமாற்றாமல் பக்குவமாக எடுத்துச் சொல்லும் அரசியல் முதிர்ச்சி முதல்வருக்கு வந்துள்ளதா என்பதை இன்று தமிழ்நாடு மக்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!