நாட்டில் அவசர நிதி தேவைக்காக வங்கிகளை அணுகும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனிநபர் கடன், வாகன கடன் போன்றவற்றை விட தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் அதிக வரவேற்பு இருப்பதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் அவமானமாக கருதப்பட்ட அடகு நடைமுறை இப்போது சிக்கனமான நிதி திட்டமிடலாக மாறியுள்ளது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி தங்க நகைக்கடன்கள் ஆண்டு அடிப்படையில் 128 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கை 91 சதவீதமாக மட்டுமே இருந்தது.
எளிய நடைமுறை, குறைந்த வட்டி, குறைந்த ஆவண தேவைகள் ஆகியவை இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இதில் மிக முக்கிய காரணமாக கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்படும் நகைக்கடன் மீது தள்ளுபடி கிடைக்கும் என்ற நோக்கத்துடன் அடகு வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் உண்மையிலேயே யாருக்கு எல்லாம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என பார்க்கலாம்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்பது அரசின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படக்கூடிய ஒரு முக்கியமான நலத்ததிட்டம். இந்த தள்ளுபடி சலுகை அனைத்து நகைக்கடன்களுக்கும் தானாக வழங்கப்படுவதில்லை. மாறாக நலிவடைந்த பிரிவினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு மட்டுமே அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே அல்லது அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட எடை வரம்பிற்குள் உள்ள நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்காக பரிசீலிக்கப்படுகின்றன. உதாரணமாக சில திட்டங்களில் ஐந்து சவரன் வரை உள்ள நகைக்கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த எடை வரம்பு அரசாணைக்கு ஏற்ப மாறுபடக்கூடியதாக இருக்கும்.
இதையும் படிங்க: கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!
மேலும் அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட தேதிக்குள் எடுத்த நகைக்கடன்கள் மட்டும்தான் தள்ளுபடிக்கு தகுதி பெறும். அரசு ஊழியர் குடும்ப உறுப்பினராக இருப்பது, கூட்டுறவு சங்கங்களில் நிர்வாக பொறுப்பு வகிப்பது, வருமான வரி செலுத்துவது போன்ற பொருளாதார வசதி கொண்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காது.
தள்ளுபடி நடைமுறையின் போது சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் தணிக்கை குழுவினர் அந்தந்த வங்கிகளில் உள்ள கடன் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்கின்றனர். கடன் பெற்ற தேதி, கடன் வழங்கப்பட்ட நோக்கம், அடகு வைக்கப்பட்ட நகையின் எடை போன்ற விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. இந்த விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணுடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலமாகவே ஒரே நபர் அல்லது ஒரே குடும்பம் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று முறைக்கேடாக தள்ளுபடி பெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பிறகு தகுதியான பயனாளிகளின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த கூட்டுறவு வங்கி கிளைகளில் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான அசல் தொகை மற்றும் அதற்கான வட்டி தொகையை தமிழ்நாடு அரசே சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குகிறது. இதன் மூலம் பயனாளிகளின் கடன் முழுமையாக முடிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படுகிறது. இதன் பிறகு பயனாளிகள் தங்களது அடையாள சான்றுகளுடன்சம்பந்தப்பட்ட வங்கிக்களையை அணுகி தேவையான நடைமுறைகளை பூர்த்தி செய்து தங்களது நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான தகவல்கள் அறிவிப்புகள் மற்றும் ரசீதுகள் வங்கி மூலமாக முறையாக வழங்கப்படுகின்றன. இந்த முறையின் மூலம் தகுதியான பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரணம் கிடைப்பதோடு கூட்டுறவு வங்கி அமைப்பின் வெளிப்படை தன்மையும் உறுதி செய்யப்படுகிறது. அதனால்தான் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக திமுக கட்சிகள் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஒரு வாக்குறுதியை அளிக்க வாய்ப்புள்ளது. இதனால் நகைக்கடன் மற்றும் பயிற்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர். இது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தாலும் கூட்டுறவு அமைப்புகளின் நீண்ட கால நிலைத்தன்மையை கேள்விக்குறியாகும். இதனால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற ஒரு சந்தேகம் தான் இருக்கிறது.
இதையும் படிங்க: சீனாவில் லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு..!!