புது டெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் உலக நாடுகள் அனைத்தும் பங்கேற்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
19-வது ரோஜ்கார் மேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரம் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “இன்று நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிக முக்கியமான நாள். இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து உலகம் மிகவும் உற்சாகமாக உள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி வந்தார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை!
பிரதமர் மேலும் பேசுகையில், “வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் உலகம் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறது. இந்திய இளைஞர்கள் இந்தப் பயணத்தை விரைவுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். வரும் ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் அனைவரும் முக்கியப் பங்காற்றப் போகிறீர்கள்” என்றார்.

ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காளர்களாக மாறி வருவதாக அவர் பாராட்டினார்.
தனது சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றியும் பிரதமர் பேசினார். ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் இந்திய இளைஞர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என்று தெரிவித்தார். “இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒளிமயமான மற்றும் திறமையான இந்தியாவுக்கான உத்தரவாதத்துடன் வருகின்றன” என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பணியமர்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பிரதமர் மனதார வாழ்த்தினார். இளைஞர்களின் திறமையும் உழைப்பும் தான் இந்தியாவை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ரோஜ்கார் மேளா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாகும். பிரதமரின் இந்த உரை இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!