ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 18ஆவது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பதற்றம் குறைந்து, எல்லை மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மத்திய அரசு, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தோடு ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 17ஆம் தேதி முதல் எஞ்சியிருக்கும் போட்டிகளை ஆறு இடங்களில் நடைபெறுகிறது. பிளே ஆஃப் சுற்றுகள் மே 29, 30, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. ஜூன் 3ஆம் தேதி இறுதிப் போட்டியை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுகள், இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படவில்லை. சிஎஸ்கே அணிக்கு சென்னையில் ஒரு போட்டி எஞசியிருந்தது. அப்போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த சீசனில் சென்னையில் போட்டிகள் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அப்போ பாகிஸ்தான்; இப்போ வங்கதேசம்.. பிசிசிஐ அதிரடி... பின்னணி என்ன?