×
 

ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டி உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. மேலும், தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் இந்தப் பட்டத்தை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா சேர்த்துக்கொண்டது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த உச்சக்கட்ட போட்டியில், 86,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு அமளியான காட்சியை உருவாக்கினர். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றது. இந்திய பேட்டிங் வரிசை அபாரமாக அமைந்தது.

தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்த்தனர். முதல் பவர்ப்ளேயில் 92 ரன்கள் எடுத்து அசத்தினர். சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக ஆட, 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. இது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இதுவரை எட்டப்படாத உயர்ந்த ஸ்கோர் ஆகும். 

இதையும் படிங்க: T20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இருந்து விலகும் ஹர்ஷித் ராணா..!! காரணம் இதுதான்..!!

ஷிவம் துபே போன்றவர்கள் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 255 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே சரிந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஜஸ்பிரித் பும்ரா தனது 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஐசிசி கோப்பைகள் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 டி20 உலகக் கோப்பைகள் (2007, 2024, 2026), 3 சாம்பியன்ஸ் டிராபிகள் (2002 - பகிரப்பட்டது, 2013, 2025), 2 ஒருநாள் உலகக் கோப்பைகள் (1983, 2011) ஆகியவை அடங்கும். இந்த சாதனை உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் முழுவதும் அசத்திய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அவர் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்து 199.37 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், "டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். இந்த வெற்றி அணியின் அசாத்திய திறன், உறுதி மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பெருமையும் மகிழ்ச்சியும் நிரம்பும்" என பதிவிட்டார்.

இதேபோல் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, "சாம்பியன்கள்! அகமதாபாத்தில் இந்திய அணி பெற்ற அபார வெற்றி. போட்டி முழுவதும் அதிரடி கிரிக்கெட். கடினமான சூழல்களில் தொடர்ந்து போராடி மீண்டும் உலக சாம்பியன்களான வீரர்களின் அற்புத குணத்திற்கு வாழ்த்துகள். அனைத்து வீரர்கள், நிர்வாக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்!" என தெரிவித்தார்.

தொடர்ந்து தவெக தலைவர் விஜய், "மீண்டும் சாம்பியன்! டி20 உலகக் கோப்பையை தக்கவைத்த இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்!" என கூறினார். இதேபோல் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் தொடர்ந்து இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளின் பட்டியலில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 10 கோப்பைகளுடன் (ஆறு ஒருநாள் உலகக் கோப்பைகள் உட்பட) முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த சாதனை, நாடு முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் பெருமிதத்தை இது மேலும் உயர்த்தியுள்ளது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் இன்னும் பெரிய சாதனைகளை எதிர்பார்க்க வைக்கிறது. ஜெய் ஹிந்த்!

இதையும் படிங்க: #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share