உலகக் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40), தனது வாழ்க்கையின் கடைசி உலகக் கோப்பை 2026-ல் நடைபெறும் என்றும், அதற்குப் பிறகு ஓய்வு பெறுவேன் என்றும் அறிவித்துள்ளார். மேலும், அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். இதுவரை 950-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகல் தேசிய அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களைப் பதிவு செய்துள்ளார். தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளபில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ஆடி வருகிறார்.
ரொனால்டோ, உலகின் முதல் பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தாண்டிய கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். தற்போது அவரது சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக (சுமார் 11,700 கோடி ரூபாய்க்கு மேல்) உயர்ந்துள்ளது. 40 வயதாகியும் உச்சபட்ச உடற்தகுதியுடன் விளையாடி வரும் ரொனால்டோ, ஓய்வு எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

இது குறித்து ரொனால்டோ பேசுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன் என்று நினைக்கிறேன். 2026 உலகக் கோப்பைதான் எனது கடைசி உலகக் கோப்பை. அதற்குப் பிறகு ஓய்வு பெறுவேன்” என்று தெரிவித்தார்.
2026-ல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இணைந்து நடத்தப்படும் உலகக் கோப்பை, ரொனால்டோவுக்கு 6-வது உலகக் கோப்பைப் போட்டியாக அமையும். ஏற்கனவே 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். 2016-ல் போர்ச்சுகலுக்கு யூரோ கோப்பையை வென்று கொடுத்ததுடன், 2019-ல் யூஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பையையும் வென்று அசத்தினார்.
ரொனால்டோவின் இந்த அறிவிப்பு, உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “எனது கடைசி உலகக் கோப்பையை சிறப்பாக முடிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறியது, ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ரொனால்டோவின் ஓய்வு, கால்பந்து உலகில் ஒரு யுகத்தின் முடிவாகக் கருதப்படுகிறது.